சூர்யா செல்வராகவன் யுவனுக்கு நன்றி – பாடலாசிரியர் கபிலன் நெகிழ்ச்சி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது.
ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
அந்தப்பாடல் வரிகள்….
தண்டல்காரன் பார்க்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டபடி ஏசுறான்
பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
நாட்டாமையின் கையில்
நாடு கெட்டு போச்சி
இந்தியனின் பண்பாட்ட
அந்நியனோ வாங்கிட்டானே
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்தானே
ஊரு சேரி ஒண்ணா இல்லையே
நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்றான்
நடு ரோட்டில்
செத்தபின்பும் நீ தள்ளி வச்ச
சுடுகாட்டில்
பாம்பு கூட கிளி வாழுமே
ஒரு கூட்டில்
இப்பாடல் வெளியானதும், தற்கால தேர்தல் நேரத்துக்கு மிகப் பொருத்தமான பாடல் என்றும் சூர்யா அரசியலுக்கு வரலாம் என்றும் பலரும் கருத்துச் சொல்கிறார்கள்.
சூர்யா ரசிகர்கள் இப்பாடலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Kabilan
இந்நிலையில் இப்பாடல் வெற்றி குறித்தும் அழுத்தமான வரிகள் மற்றும் அரசியல் விமர்சனங்களை வைத்திருப்பது குறித்தும் பாடலாசிரியர் கபிலனிடம் பேசினோம். அவர்…
பாடல் வெளியான கணத்திலிருந்து நிறைய பாராட்டுகளும் வரவேற்புகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.
நான் இயக்குநர் செல்வராகவனுடன் பணியாற்றிய முதல்படம் முதல்பாடல் இது.
இந்தப் பாடலுக்காக, ஒருமுறை அவரைச் சந்தித்தேன், பாடல் இடம்பெறும் சூழலை விளக்கிய அவர், உங்கள் எண்ணப்படி எழுதுங்கள் என்றார்.
நான் பராசக்தி படத்தில் இடம்பெற்ற கா கா கா பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.
எழுதி முடித்து இயக்குநருக்கு அனுப்பிய பின்பு திருத்தம் என்று எதுவும் சொல்லாமல் அப்படியே வைத்துள்ளனர்.
என்னால், பாடல் பதிவு, படப்பிடிப்பு என்று எதற்கும் போக முடியவில்லை.
நானே, பாடல் வெளியான பிறகுதான் முழுமையாகக் கேட்டேன்.
சிறப்பாக அமைந்திருக்கிறது.மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் வரிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொண்ட இயக்குநர் செல்வராகவன்,
சிறப்பான இசையைக் கொடுத்து பெரும் வரவேற்பை ஈட்டித் தந்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா,
மற்றும், வெளியான நேரத்திலிருந்து பெரிதாகக் கொண்டாடி பட்டி தொட்டியெங்கும் பாடலை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் சூர்யா ரசிகர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
என்று நெகிழ்வுடன் சொல்கிறார் கபிலன்.











