Uncategorized

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம்
இந்தியன் 2.

இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.

அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.

இதனால் கமல்,விக்ரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.இயக்குநர் ஷங்கரும் தெலுங்குப்படம் இயக்கப்போனார்.

இந்நிலையில்,ஆகஸ்ட் 26,2021 அன்று சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தாராம்.

அதன்படி, கமல் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்தனராம். அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே ராம்சரண் படம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியன் 2 வை முடிக்காமல் வேறு படத்துக்கு ஷங்கர் போகக்கூடாது என்கிற கோரிக்கையுடன் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 29 அன்று முடித்து வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

அப்போது என்னமாதிரியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? என்பது பற்றிக் கேட்டால், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும் என்று ஷங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதனால், மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்த வேலைகள் தொடங்கியுள்ளனவாம்.

டிசம்பர் முதல்வாரம் வரையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக கமல் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.அப்படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள கமல் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.அதற்குள் ராம்சரண் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஷங்கர் வந்துவிடுவார். எனவே, டிசம்பர் இரண்டாவது வாரத்திலேயே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

எப்படியோ நல்லபடியாக நடந்தால் நல்லதுதான்.

Related Posts