சினிமா செய்திகள்

உதயநிதியிடம் பேசினோம் திரையரங்குகள் கிடைத்தன – விஷால் வெளிப்படை

இவ்வாண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாள். அதையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டிருந்த ஒரு குரல்பதிவில்,

ஓடிடி தளத்தில் எங்கள் எனிமி படத்தை வெளியிட நல்ல வாய்ப்பு இருந்தபோதும் திரையரங்குகளில்தான் படத்தை வெளியிடவேண்டும் என்கிற உறுதி எடுத்தோம். அதன்படி நவம்பர் 4 தீபாவளி நாளில் திரைக்கு வரவிருக்கிறோம். ஆனால் எங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்கிற சூழல் இருப்பதாக அறிகிறேன்.

இதனால், நான் சார்ந்திருக்கும் சங்கம் சார்பானவர்கள் எங்களுக்கு 250 திரையரங்குகள் கிடைக்க உதவவேண்டும்.
தீபாவளி போன்றதொரு பெரிய பண்டிகையின்போது இரண்டு படங்கள் வந்தாலும் இரண்டும் இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் 900 திரையரங்குகளில் திரையிட்டால் இரண்டாவது நாளே கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

அவர் நேரடியாக அண்ணாத்த படத்துக்கு 900 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள் எங்களுக்கு நூற்றுச்சொச்சம் திரையரங்குகள்தாம் கிடைக்கும்போல் தெரிகிறது என்று சொல்லவில்லையென்றாலும் அவர் பேச்சின் சாரம் அதுதான்.

அதன்பின் விஷாலிடம்,

படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் பற்றி தயாரிப்பாளர் கூறினார், நீங்கள் அதற்கு எதுவும் குரல் கொடுக்கவில்லையே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

குரல் கொடுக்கவில்லை என இல்லை. 10 வருடங்களுக்கு முன்னால் தீபாவளிக்கு 4 படங்கள் வரும் அப்போது 1200 தியேட்டர்கள் இருந்தன. இப்போது இயங்கும் தியேட்டர்கள் 900 தான் இருக்கும். தயாரிப்பாளர் வைத்த விண்ணப்பம் 250 தியேட்டர்கள் போதும் என நியாமான கோரிக்கையைத் தான் வைத்தார். தயாரிப்பாளர் வினோத் 250 தியேட்டர்கள் வேண்டும் எனக் கேட்டதில் தவறில்லை. இதற்காகப் பின்னர் நாங்கள் உதயநிதியிடம் பேசினோம். இப்போது உறுதியான தியேட்டர்களின் எண்ணிக்கை 242. கொஞ்ச நேரம் முன் தான் ஒரு தியேட்டர் உறுதியானது. இப்போது சினிமாவில் சோலோ ரிலீஸ் என்பது வாய்ப்பே கிடையாது. ரஜினி சாருக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது அவர் படங்களின் பட்ஜெட் அப்படி, வியாபாரம் அப்படி. இந்தப்படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஸ்கேலில் தான் தயாரித்துள்ளோம், அதற்கான வெளீயீடும் இதற்குத் தேவை அது இப்போது நடந்திருக்கிறது. சந்தோஷம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஷாலின் இக்கருத்திலிருந்து உதயநிதியிடம் பேசிய பின்பே எனிமி படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

Related Posts