எதற்கும் துணிந்தவன் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரம் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.தீபாவளி முடிந்ததும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல்நிலை தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை சுமார் முன்னூறு பேர் உள்ளனராம்.அவர்கள் அனைவருக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சூர்யா.
லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் சூர்யா அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. நேரில் போனால் அவரே வந்து, ஆளுக்கு அரைபவுன் தங்கம் பரிசு கொடுத்திருக்கிறார்.அதுவும் 24 கேரட் தங்கமாம். அதன் இன்றைய மதிப்பு சுமார் 19 ஆயிரத்துச் சொச்சம்.
தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இரண்டு மற்றும் மூன்று பவுன்களில் தங்கச்சங்கிலி உள்ளிட்ட பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்ததன் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கொரோனா காலத்தில் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு சூர்யா செய்த இந்த உதவி பேருதவியாக இருக்கிறது.
விளம்பரம் இல்லாமல் அவர் கொடுத்திருக்கும் இந்தப்பரிசு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்திருக்கிறது.











