விமர்சனம்

தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டுக்கு மிக அண்மையில் இருக்கும் தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசுகளால் தமிழ்மக்கள் எவ்வளவு கொடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்? என்பனவற்றை செய்திகளாக நாம் அறிந்திருக்கிறோம்.அதையே ஒரு கலைப்படைப்பாகப் பார்க்கும்போது நெஞ்சம் கனக்கிறது.அப்படிப்பட்ட கனத்தைக் கொடுத்திருக்கும் படம் தாய்நிலம்.

தமிழீழப்போராட்டத்தினால் மனைவியை இழந்த நாயகன் அமர் ராமச்சந்திரன்,மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு வருகிறார்.மதுரையில் அவர்கள் படும்பாடு கண்களில் கண்ணீரை வரவழைக்கும்விதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன்,தமிழீழத் தமிழர்களின் வலிகளை தன் கண்கள் மற்றும் உடல்மொழி மூலம் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.அவருடைய தோற்றமும் கதாபாத்திரத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

மகளாக நடித்திருக்கும் நேகாஅமர்,குழந்தைமை மற்றும் எதார்த்தம் ஆகியனவற்றிற்கு இடையேயான மாபெரும் இடைவெளியை சரியாக வெளிப்படுத்தி கலங்க வைக்கிறார்.படத்தில் அவர் அதிகம் பேசமாட்டார்.படம் பார்க்கும் எல்லோரும் அவரைப் பற்றி அதிகம் பேசியாகவேண்டும்.

பாலாசிங் கதாபாத்திரம்,ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதி போல் அமைந்திருக்கிறது.ஈழத்தமிழ்மக்கள் மீதான பரிவு அதை வெளிப்படுத்தியிருக்கும் விதம் ஆகியன சிறப்பு.

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத்,காட்சிகளில் இருக்கும் உணர்வுப்பூர்வமான வலிகளை காட்சிகளிலும் வெளிப்படுத்தி படத்தின் கனத்துக்குக் கனம் சேர்த்திருக்கிறார்.

அவுசேப்பச்சன் இசையமைத்திருக்கிறார்.கதையின் தன்மையை உணர்ந்து உழைத்திருக்கிறார்.பல இடங்களில் அவருடைய இசைதான் வசனங்கள் போல் பார்வையாளர்களுடன் உரையாடுகிறது.

இப்படம் பரபரவென ஓடக்கூடிய படமன்று,நின்று நிதானித்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய படம் என்பதை உணர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் டீஜோ பி.வர்க்கீஸ்.

எழுதி இயக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜி.தேவன்.தமிழீழ மக்களின் துயர்களை எடுத்துச் சொல்லக்கூடிய படைப்புகள் வரிசையில் இடம்பிடிக்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஓர் தந்தையையும் அவர் மகளையும் வைத்துக்கொண்டு அவர் எழுதியிருக்கும் சித்திரம் பெரிது.மதுரையில் இருக்கும் கதாபாத்திரங்கள்,காவல்துறையாக இருந்தாலும் சரி,தானி ஓட்டுநர்களாக இருந்தாலும் சரி,பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி,மதுரை மண்ணுக்குரிய கிடா மீசைக்காரர்களாக இருந்தாலும் சரி,அவர்கள் எல்லோரிடமும் புதைந்திருக்கும் மாந்தநேயம் மற்றும் தமிழன் என்கிற உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

தமிழ்நாட்டில் தமீழழ ஏதிலிகள் படும்பாட்டின் சிறுதுளியைப் படமாக்கி கண்களில் பெருவெள்ளத்தை உருவாக்கியிருக்கிறார்.

– இளையோன்.

Related Posts