வெளிவருமுன்பே வெற்றி – ஹைகூ தயாரிப்பாளர் மகிழ்ச்சி
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ஹைகூ.ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஜோ,கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்தம் தயாரித்திருக்கும் படம் இது.
இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.கூடுதல் திரைக்கதையை ஹரிஹரன் எழுதியுள்ளார்.பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சக்தி பிரணேஷ்.பி படத்தொகுப்பு செய்துள்ளார்.பிரேம் கருந்தமலை கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம்,வரும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில்,படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.டி.அருளானந்தம், நாயகன் ஏகன் மற்றும் நாயகி ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் படம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நாயகன் ஏகன் படம் பற்றிக் கூறியதாவது….
மனோகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் படிக்கிறான்.அது எப்படி? அதற்கு என்ன காரணம்? என்பதைச் சொல்கிறது படம்.
இந்தப்படம்,காதலர்கள்,திருமணமாகி தம்பதியாக வாழ்பவர்கள் ஆகியோர் சிந்திக்கக்கூடிய படமாக இருக்கும்.இந்தப்படத்தைப் பார்க்கும் போது,நாம் இதை இப்படிச் செய்திருக்க கூடாதோ? என்று நினைக்கத் தோன்றும்.இந்தப்படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு அப்படி தோன்றியது.படமாக பார்க்கும்போதும் அதுதான் தோன்றியது.அப்போதே நாம் ஒரு நல்லகதையைத்தான் தேர்வு செய்திருக்கிறோம், தப்பான படம் பண்ணவில்லை என்று தோன்றியது.இது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கான படமாக அல்லாமல் அனைத்து வயதினருக்குமான படமாக இருக்கும்.காதல் என்றால் இளம் வயதில் மட்டுமே வருவதில்லை,திருமணமானவர்கள் கூட காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இது தலைமுறைகள் கடந்த படம் என்றார்.
நாயகி ஃபெமினா ஜார்ஜ் கூறியதாவது….
நான் ’மின்னல் முரளி’ படத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது பெருமையாக இருக்கிறது.
இந்தக்கதையைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது.உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். என் கதாபாத்திரம் சிறப்பானது.இது என் சினிமா பயணத்துக்கு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலும்,அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை. என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது? என்று மட்டுமே யோசித்தேன்.கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும்,அதற்கு முக்கியத்துவம் இருந்தால் அதில் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.இந்த கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருந்ததால் இரண்டு நாயகிகள் இருந்தாலும் சரியென நடித்தேன்.இதில் எனக்கு நல்லபெயர் கிடைக்கும் என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர்.டி.அருளானந்தம் கூறியதாவது….
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கிய அரைமணி நேரத்தில் இந்தப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.நான் ஒரு தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி 14 வயதில் இருந்தே நிறைய படங்கள் பார்ப்பேன்.அது நல்லா இருக்கும்,இல்லை என்று சொல்வேன்.அப்படித்தான் இந்தக்கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது.சமீபகால காதல் படங்களில் இருந்து இந்தப்படம் வேறுபட்டிருக்கும்.ஓர் இளைஞனின் 19 வயது முதல் 26 வயது வரையிலான பயணம்தான் இப்படத்தின் கதை.படத்தில் இருக்கும் சில சம்பவங்கள் 45 வயதுள்ளவர்களையும் கனெக்ட் செய்யும்.மற்ற விசயங்கள் சிலரை கனெக்ட் செய்யும்.
நான் தயாரித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இது.ஜோ படத்தை நான்கு கோடியில் எடுத்தோம்.கோழிப்பண்ணை செல்லதுரை படம் தயாரிப்பு இரண்டு மடங்கானது.இந்தப்படத்தை ரூ.11 கோடியில் தயாரித்திருக்கிறேன்.
முந்தைய படங்களில் நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.அது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.எனக்கு சினிமா தொழில் அல்ல.இதில் முதலீடு செய்து இலாபம் சம்பாதிக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.என்னுடைய மற்ற தொழில்களில் தோல்வியடைந்தால் அது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால்,சினிமாவில் தோல்வியடைந்தால் ஊருக்கே தெரிந்து விடுகிறது.அது எனக்கு மிகப்பெரிய மனக்கஷ்டம் கொடுத்தது.இந்தத்துறையில் வெற்றி பெற்றாக வேண்டும் என வைராக்கியம் கொண்டேன்.நான் நினைத்தது போல் வெற்றியும் பெற்றுவிட்டேன்.
எப்படித் தெரியுமா?
இந்தப்படத்தின் கதையை மட்டுமே கேட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் படத்தை வாங்கியிருக்கிறார்கள்.சாட்டிலைட் விற்பனையாகி விட்டது.படத்தின் பாடல்களை பெரியதொகைக்கு சரிகமா வாங்கியிருக்கிறது.ஜோ படத்தின் பாடல்களுக்கு சுமார் ரூ.60 இலட்சம் செலவு செய்தேன்.அந்தப்படத்தின் பாடல்கள் எவ்வளவு பெரிய ஹிட்டானது.இந்தப்படத்தின் பாடல்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்திருக்கிறேன்.அப்படியானால் இந்தப்படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கும் என்று பாருங்கள்.இதுவரையிலேயே நான் போட்ட முதலீட்டில் 80 சதவீதம் வந்துவிட்டது.இது இந்தப்படத்திற்கும் எனக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.










