சிக்கலில் கராத்தேபாபு – வெளியீடு எப்போது?
ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கராத்தேபாபு. டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அவர்களோடு,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி வெங்கட்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.இயக்குநர் ரத்ன குமார் மற்றும் பாக்கியம் சங்கர் ஆகியோர் திரைக்கதையில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க அரசியல்கதையை மையமாகக் கொண்ட படம் என்பது படத்தின் குறுமுன்னோட்டம் வெளியானபோது உறுதியானது.அரசியல் படமென்பதால் அந்த முன்னோட்டம் வெளியான நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்,படத்தில் இடம்பெறும் ராசாதி ராசா என்கிற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.எல்லாக் கட்சிக்காரர்களும் அந்தப்பாடலை தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தப்படம்,ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால்,அப்போது படம் வெளியாகவில்லை.
அதற்குக் காரணம்,கேஜிஎஃப் புகழ் யாஷ் நடித்திருக்கும் டாக்ஸிக் படம்,கன்னடம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியானது.அப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியானது.
அப்போது அப்படத்துக்கே திரையரங்குக்காரர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதால் அந்த நேரத்தில் கராத்தே பாபு படத்தை வெளியிடவேண்டாம் என்கிற முடிவை படக்குழு எடுத்ததாகச் சொல்லப்பட்டது.
அதன்பின்,அக்டோபர் ஒன்றாம் தேதி அப்படத்தை வெளியிடத் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது.ஆனால்,அதுபற்றிய அறிவிப்பும் வரவில்லை.அக்டோபர் 1 ஆம் தேதி படமும் வெளியாகவில்லை.
என்னவாயிற்று?
இந்தப்படத்தை அக்டோபர் 1 இல் வெளியிடத் திட்டமிட்டு,படத்தைத் தணிக்கைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர்,இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை நினைவுபடுத்துவது போல் காட்சிகள் இருக்கின்றன மற்றும் சமகால அரசியல் தலைவர்கள் பலரையும் நினைவூட்டும் காட்சிகள் இருக்கின்றன.எனவே,தணிக்கைச் சான்று தரவியலாது என்று சொல்லிவிட்டார்களாம்.
அதன்பின்,அவர்களே ரிவைசிங் கமிட்டி எனப்படும் மறு ஆய்வுக்குழுவுக்குப் பரிந்துரை செய்துவிட்டார்களாம்.மறு ஆய்வுக்குழு படம் பார்த்து சான்றிதழ் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் அக்டோபர் 1 அன்று படம் வெளியாகவில்லை என்கிறார்கள்.
எப்போது வெளியாகும்?
இன்னொரு பக்கம்,இப்படத்தின் வியாபாரம் தொடர்பாக சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும் அவற்றைச் சரிசெய்து வியாபாரங்களை முடிக்க தாமதமாகலாம் என்பதால் இவ்வாண்டு இப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
ஏதாவது அதிரடி மாற்றம் நடந்தால் இதில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.










