விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் வெளியீட்டுத் தேதி முடிவானது – படக்குழு மகிழ்ச்சி
விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம், காவல்துறையில் வேலைக்குச் சேருபவருகளுக்குக் கொடுக்கப்படும் பயிற்சி கால வாழ்க்கையைச் சொல்லும் படம். கல்லூரி மாணவர்களுக்கு நிகராக காவல்துறை பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரசியங்கள் உண்டு. வழக்கமான காவல்துறை படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இருக்கும் என்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகிறது. ஏப்ரல் எட்டாம்தேதி இப்படம் வெளியாகும் என்கிறார்கள்.நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியீட்டுத் தேதி முடிவானதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் 25 ஆம் தேதி ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகவிருக்கிறது. ஏப்ரல் 14 அன்று விஜய்யின் பீஸ்ட், கேஜிஎஃப் 2 ஆகிய பெரிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இவற்றிற்கிடைப்பட்ட நாளில் வெளியானாலும் இப்படம் மக்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.











