சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் – நாசர் விஷால் கார்த்தி அணி அமோக வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணி என்ற பெயரிலும், இயக்குநர் பாக்யராஜ்,ஐசரிகணேஷ் உள்ளிட்டவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரிலும் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் ஓட்டுகளை எண்ண உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் ஓட்டுகளை எண்ணலாம் என்று உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி ஆனது.

இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளி வளாகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

எண்ணிக்கை முடிவில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்து நிர்வாகப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் 884 வாக்குகள் நேரடிப் பதிவிலும், 217 வாக்குகள் தபால் பதிவிலும் கிடைத்துள்ளன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் 703 வாக்குகளை நேரடிப் பதிவிலும், 351 வாக்குகளை தபால் பதிவிலும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் நாசர் 647 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜை தோற்கடித்துள்ளார். இதில் செல்லாத வாக்குகள் 33.

செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷால் 1720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் 898 வாக்குகளை நேரடிப் பதிவிலும், 822 வாக்குகளை தபால் பதிவிலும் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் ஐசரி கே.கணேஷ் 1032 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதில் 687 வாக்குகளை நேரடிப் பதிவிலும், 345 வாக்குகளை தபால் பதிவிலும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் விஷால் 688 வாக்குகள் வித்தியாசத்தில் ஐசரி கணேஷை தோற்கடித்துள்ளார். இதில் செல்லாத வாக்குகள் 35.

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தி தபால் வாக்குகளில் 818, மற்றும் நேரடி வாக்குகளில் 1009-ஐயும் பெற்று மொத்தமாக 1827 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் பிரசாந்த் நேரடிப் பதிவில் 568 வாக்குகளையும், 351 வாக்குகளை தபால் பதிவிலுமாக மொத்தம் 919 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் கார்த்தி 908 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் பிரசாந்தை தோற்கடித்துள்ளார். இதில் செல்லாத வாக்குகள் 42.

துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் பூச்சி முருகன் 1612 வாக்குகளையும், நடிகர் கருணாஸ் 1605 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் நடிகர் பூச்சி முருகன் நேரடிப் பதிவில் 821 வாக்குகளையும், தபால் பதிவில் 791 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

நடிகர் கருணாஸ் நேரடிப் பதிவில் 801 வாக்குகளையும், தபால் பதிவில் 904 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை குட்டி பத்மினி 1015 வாக்குகளையும், நடிகர் உதயா 973 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

இதில் நடிகை குட்டி பத்மினி நேரடிப் பதிவில் 665 வாக்குகளையும், தபால் பதிவில் 350 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

நடிகர் உதயா நேரடிப் பதிவில் 610 வாக்குகளையும், தபால் பதிவில் 363 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இதிலும் 65 வாக்குகள் செல்லாத வாக்குகளாகும்.

கோவைசரளா,குஷ்பு, மனோபாலா, பசுபதி, சிபிராஜ், நந்தா, ரமணா,ராஜேஷ், அஜய்ரத்தினம், ஜூனியர் பாலையா, லதா,விக்னேஷ், சோனியா,பிரசன்னா, தளபதி தினேஷ்,சரவணன்,பிரேம்குமார்,ஸ்ரீராம், ஜெரால்டு, ரத்னப்பா, மா.பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரா, காளீமுத்து ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்கள்.

Related Posts