தமிழ்நடிகர்களில் அதிகம் கொடுத்த விக்ரம்
கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், இந்த நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பலரும் கேரளாவுக்கு உதவி வரும் நிலையில்,
திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 இலட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 இலட்ச ரூபாய், ரோகிணி 2 இலட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.
மேலும், விஜய் சேதுபதி 25 இலட்ச ரூபாய், தனுஷ் 15 இலட்ச ரூபாய், சித்தார்த் 10 இலட்ச ரூபாய், நயன்தாரா 10 இலட்ச ரூபாய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 இலட்ச ரூபாய், இயக்குநர் ஷங்கர் 10 இலட்ச ரூபாய் அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 15 இலட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது பங்களிப்பாக ரூபாய் 35 இலட்சம் கொடுத்துள்ளார். தமிழ் நடிகர்களிலேயே இவர் கொடுத்ததுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.











