தர்பார் படத்துக்கு திடீர் எதிர்ப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் தர்பார் படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னடப் படங்களைத் தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் கர்நாடகாவில் திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி உள்ளது.
தர்பார் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் நேரடித் தமிழ் படமாக வெளியிட உள்ளனர். தர்பார் படத்தைக் கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.
கர்நாடகாவில் தர்பார் படத்தைத் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்தப் படத்துக்கு அதிக திரையரங்குகளையும் ஒதுக்கி உள்ளனர்.
இந்த நிலையில் படத்துக்கு எதிராகப் போராட்டம் நடப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி காவல்துறை பாதுகாப்புடன் படத்தை திரையிட்டனர்.
இப்போதும் அதுபோலவே நடக்கும் என்கிறார்கள்.











