சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் ஸ்டார் வெளியீடு தள்ளிப்போகிறது

நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம்.

இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்டார் படத்தை பிப்ரவரி 14,2014 காதலர் தினத்தன்று வெளியிட்டுவிடவேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்துவந்தார்கள்.

ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், பேட்ச் ஒர்க் என்று சொல்லப்படும் தவறியகாட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரம் முதல் பத்துநாட்கள் வரை இருக்கிறதாம்.

அதற்காக கவின் தேதிகள் முழுமையாகக் கிடைக்கவில்லையாம். இரண்டுநாட்கள் மூன்று நாட்கள் எனப் பிரித்துப் பிரித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்.

எனவே படப்பிடிப்பு முடியவே இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல்வாரம் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது.

இது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய ஒளிபரப்பு ஆகியனவற்றுக்குப் படக்குழு கேட்கும் விலையைக் கொடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராக இல்லை.

இந்த வியாபாரங்களை படவெளியீட்டுக்கு முன்பே செய்துவிடவேண்டும்,அதன்பின் படத்தை வெளியிடவேண்டும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு.

படம் முழுமையாகத் தயாரான பின்புதான் வியாபாரம் செய்யவியலும். படம் முழுமையடையப் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிற நிலை நீடிக்கிறது.

இதனால் ஏற்கெனவே நினைத்தபடி பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை வெளியிடவியலாது எனும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதேசமயம் எந்த வேலையும் தடைபடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை வியாபார விசயத்தில் முன்னேற்றம் இருந்தால் அதையொட்டி வேலைகளை வேகப்படுத்தி படத்தை வெளியிட்டுவிடலாம் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

படவியாபாரம் சம்பந்தமான புறச்சூழல்களைப் பார்க்கும்போது அதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்கிறார்கள்.

இதனால் காதலர் தினத்தில் ஸ்டார் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கவின் இரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts