சினிமா செய்திகள் நடிகை

ஒரே நாள் மூன்று இடங்கள் – ஸ்ரீதேவிக்கு திரையுலகம் அஞ்சலி

பிப்ரவரி 24 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மார்ச் 11 ஆம் தேதி ஒரேநாளில் சென்னையில் மூன்று இடங்களில் அஞ்சலிக்கூட்டம் நடந்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து ஸ்ரீதேவி உடல் மும்பை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் அஸ்தியை கடந்த வாரம் சென்னை கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.

ஸ்ரீதேவி மறைவுக்கு பல்வேறு நகரங்களில் தற்போது அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையிலும், ஐதராபாத்திலும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னையிலும் அஞ்சலி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில், நேற்று இரவு இந்த அஞ்சலிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் தமிழ்த் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Sridevi Homage

Sridevi Homage

அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:

சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, ஸ்ரீகாந்த், அருண்விஜய், வின்சென்ட் அசோகன், வினீத், லதா ரஜினிகாந்த், வைஜயந்திமாலா, ராதிகா சரத்குமார், ஜோதிகா, லதா, மீனா, சினேகா, பூர்ணிமா, சுகாசினி, விமலா ராமன், சோனியா அகர்வால், காயத்ரி ரகுராம், மகேஷ்வரி, குட்டி பத்மினி, சத்தியபிரியா, புவனேஸ்வரி.

இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தங்கர்பச்சான், தயாரிப்பாளர்கள் தாணு, டி.சிவா, ஐசரி கணேஷ், டி.ஜி.தியாகராஜன், ராம்குமார், ஏ.எம்.ரத்னம், ராஜ்குமார், சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இவ்விரு நிகழ்ச்சிகளும் ஸ்ரீதேவி குடும்பத்தாரால் நடத்தப்பட்டன். மூன்றாவது நிகழ்ச்சியை நடிகர் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பசுபதி, அயூப்கான், பிரகாஷ், மனோபாலா, ஹேமச்சந்திரன், நடிகைகள் அம்பிகா, ஸ்ரீபிரியா, சத்யபிரியா, குட்டிபத்மினி, சிவகாமி உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Posts