Uncategorized சினிமா செய்திகள்

மார்ச் 31 இல் மகுடம் – சொல்லி அடித்த சூரி

1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவை அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.ரஜினி, விஜய், அஜீத்,சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியொரின் படங்களில் நகைச்சுவை வேடத்துக்கு அவர் இருந்தால்தான் நல்லது என்று அவருடைய தேதிகளில் சிக்கல் இருந்தால்கூட அவருக்காகக் காத்திருந்து ஒப்பந்தம் செய்தார்கள்.

அப்போதே அவரை கதாநாயகனாக நடிக்கக் கேட்டுப் பலர் அணுகினார்கள். ஆனால் அவற்றை அவர் ஏற்கவில்லை. நல்லாப் போய்கிட்டிருக்கு அதுல மண்ணப் போட்றாதீங்க என்று வெளிப்படையாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் திரையுலகம் விடவில்லை. தொடர்ந்து அவரை நாயகனாக நடிக்க வைக்கப் பலர் முயன்றுகொண்டேயிருந்தார்கள். எல்லாவற்றையும் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தார். அவர் உடன் இருப்பவர்களே, இவர் ஏன் இப்படிச் செய்கிறார்? என்று எரிச்சலைடையும் அளவுக்கு வந்த வாய்ப்புகளை நிராகரித்தார்.

அதேசமயம், அவருக்குள் ஒரு கணக்கு இருந்திருக்கிறது. அதை அவர் மனதில் மட்டுமே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அது என்னவெனில்?

கதாநாயகனாவது எளிது. அதைத் தக்க வைப்பதுதான் கடினம். அதேசமயம் தொடக்கப்படங்களிலேயே மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளும்படியான படங்களைத் தேர்வு செய்யவேண்டும் என்பதுதான்.

அதனால் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கைப் போல நல்ல இயக்குநர் சரியான கதை என்கிற இரைக்காகக் காத்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்குநர் அவர் முதலில் சொன்ன கதை அதன்பின் இப்போது எடுத்திருக்கும் விடுதலை கதை ஆகியன தம்க்குப் பொருத்தமானது என்பதை உணர்ந்து ஏற்றார்.பல படங்களைத் தவிர்த்துவிட்டு இந்தப்படத்துக்கு உழைப்பைச் செலுத்தினார்.

மார்ச் 31 ஆம் தேதிதான் படம் வெளியாகவிருக்கிறது. ஆனால் அவர் சொல்லி அடித்த கில்லி என்பது இப்போதே நிரூபணம் ஆகிவிட்டது.

ஆம், ஒரு மாதத்துக்கு முன்பு விடுதலை படத்தின் முதல்பாடல் காணொலி வெளியானது. உன்னோட நடந்தா என்கிற அந்தப்பாடலை தனுஷ் பாடியிருந்தார்.அந்தப்பாடலுக்குப் பெரும் வரவேற்பு.அதைவிட சூரியின் தோற்றப்பொருத்தத்துக்கு நல்ல வரவேற்பு.

அதன்பின் வெளியான வழிநெடுக காட்டுமல்லி பாடலும் அவருக்கு மிகுந்த நற்பெயரைப் பெற்றுத்தந்தது.

இவற்றிற்குப் பின் வெளியான விடுதலை படத்தின் காட்சிகள், அவற்றில் சண்டைக்காட்சிகள் உட்பட எல்லாவற்றிலும் மிக இயல்பாக நடித்திருந்தது ஆகியன அவருடைய வெற்றியைப் பறைசாற்றுகின்றன.

அவர் கதைநாயகனாக நடிக்கும் முதல்படத்திலேயே இயக்குநர் வெற்றிமாறன், இசை இளையராஜா, உடன் விஜயசேதுபதி, அவருக்காகப் பாடிய தனுஷ்,நான்கு கோடியில் தொடங்கி நாற்பது கோடியைத் தொட்டாலும் சுணங்காமல் தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய எல்லாமே பெரிதாக அமைந்திருக்கின்றன.

அவற்றோடு இப்படத்தை வெளியிடுவது ரெட்ஜெயண்ட் நிறுவனம்.

இவை எல்லாம் ஒரு அழுத்தமான அடித்தளம் என்றால் இப்படத்தை அடுத்து அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும்
இயக்குநர்கள் மற்றும் பட்ங்கள் குறித்த தகவல்கள், ஓர் அழகான மாளிகை உருவாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் இருக்கிறது.

எவ்வித திரைத்துறை பின்புலமும் இல்லாமல் தொழில்பக்தி உழைப்பு விடாமுயற்சி ஆகியனவற்றில் விண்ணைத் தொட்டிருக்கும் சூரிக்கு வெற்றி மகுடத்தை மார்ச் 31 ஆம் தேதி மக்கள் வழங்குவார்கள் என்பதில் மாற்றமில்லை.

Related Posts