விமர்சனம்

மார்க் – திரைப்பட விமர்சனம்

முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணி மற்றும் ஒரேநாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கிற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான நாயகன் சுதீப்.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை வெகுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் மார்க்.

நாயகனாக நடித்திருக்கும் கிச்சா சுதீப், சும்மா பார்த்தாலே தெனாவெட்டாகப் பார்க்கிற மாதிரிதான் இருக்கும் காவலதிகாரி என்கிற திமிருடன் பார்த்தால் கேட்கவே வேண்டியதில்லை.படம் நெடுக அப்படித்தான் இருக்கிறார்.அதற்குத் தகுந்தாற்போல் சண்டைக்காட்சிகள் மற்றும் வசனங்கள் வைத்து அவரை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள்.

எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் நவீன்சந்திரா நாயகன் சுதீப்புக்கு நான் கொஞ்சமும் சளைத்தவனில்லை என்று சொல்லும் வண்ணம் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.அவருடைய பார்வைக் கூர்மை அவருக்குப் பெரும்பலம்.

குருசோமசுந்தரத்தின் பாத்திரப்படைப்பு சிறிது என்றாலும் தன் தேர்ந்த நடிப்பால் அதைப் பெரிதாக்கி தன் இருப்பைப் பெரிதாகப் பதிவு செய்திருக்கிறார்.

நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் யோகிபாபு, தன் பங்கை நிறைவாகச் செய்ய முயன்றிருக்கிறார்.

சிறிய வேடமென்றாலும் சிறப்பாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் விக்ராந்த்.

எல்லாமே ஆண்களாக இருக்கிறார்களே? படத்தில் பெண்களே இல்லையா? என்று கேட்போருக்கு, காவல்துறைக் குழுவில், ரோஷினி பிரகாஷ் மற்றும் தீப்ஷிகா ஆகியோரை நடிக்க வைத்து குறைதீர்த்திருக்கிறார்கள்.

சேகர் சந்துரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருக்குத் தோதான கதைக்களம் அமைந்திருப்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார்.

பி.அஜ்னீஸ் லோக்நாத் இசையில் பாடல்கள் துள்ளல் இரகம்.பின்னணி இசையில் கதாபாத்திரங்களின் பிம்பங்கள் பன்மடங்கு உயர்ந்திருக்கின்றன.

எஸ்.ஆர்.கணேஷ்பாபுவின் படத்தொகுப்பு படத்தை வேகமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது.

விஜய் கார்த்திகேயா எழுதி இயக்குகிறார்.கதையில் நாயகர்களைப் பொருத்துவது ஒருவகை.நாயகர்களுக்காகவே கதை எழுதுவது இன்னொரு வகை. இவர் இரண்டாவது வகையில் இணைந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதிவரை நாயகன் கிச்சா சுதீப்பை கொண்டாடும் வகையில் காட்சிகள் வசனங்கள் பில்டப்கள் எல்லாம் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.

– இளையவன்

Related Posts