சார்பட்டா பரம்பரை – ஏமாற்றமளிக்கும் பா.இரஞ்சித்தின் முடிவு
2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.
ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முழுமையாகத் தயாராகிவிட்ட இந்தப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார்களாம்.அதற்காக அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
அண்மைக்காலமாக பல திரைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன. அந்த வரிசையில் இந்தப்படமும் சேர்ந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
ஏனெனில், இது வெறும் பொழுதுபோக்குப் படம் மட்டுமன்று.
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் குத்துச்சண்டைப் போட்டிகள் அதன்மூலம் எளியமக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடு ஆகியனவற்றை இப்படம் மூலம் அடையாளப்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இதற்காகப் பெரும் பொருட்செலவில் குத்துச்சண்டைகாட்சிகள் உள்ளிட்ட முக்கியக்காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். இதை வியாபார ரீதியான ஒரு படமாக எண்ணியிருந்தால் அவ்வளவு செலவுகள் செய்திருக்கவேண்டியதில்லை.
படம் எடுக்கும்போது ஒரு கலைப்படைப்பின் மூலம் மறையும் வரலாறைச் சொல்லிவிடவேண்டும் என்கிற தவிப்புடன் இருந்த இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது படத்தை இணையத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார்.
பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கும் அக்காட்சிகளைப் பெரிய திரையில் பார்ப்பதுதான் நல்ல அனுபவமாக இருக்கும். அதை சின்னத்திரையிலும் கைபேசித் திரையிலும்தான் பார்க்கவேண்டும் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
– அன்பன்











