சினிமா செய்திகள்

நயன்தாரா படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை – தொடரும் சிக்கல்

நேரம்,பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் ஏழாண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் கோல்டு.

இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர்.

ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநாளில் தமிழிலும் இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

சிம்புவின் மாநாடு படத்தை வெளியிட்ட கோவை சுப்பையா இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தார்.அதற்காக அவர் கொடுத்த விலை சுமார் தொண்ணூறு இலட்சம்.

ஆனால், அறிவித்தபடி ஓணம் பண்டிகை நாளில் அப்படம் வெளியாகவில்லை.

அதன்பின், டிசம்பர் ஒன்றாம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் சொன்னபடி அந்தப்படம் தமிழில் வெளியாகவில்லை. மலையாளத்தில் மட்டும் வெளியானது. அதற்குக் காரணம் தமிழில் குரல்மாற்றும் வேலைகள் முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

வேலைகள் நிறைவு பெற்று டிசம்பர் 2 ஆம் தேதி தமிழில் அந்தப்படம் வெளியாகும் என்றும் சொன்னார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் நேற்றும் அந்தப்படம் வெளியாகவில்லை.

அதற்குக் காரணம், டிசம்பர் 1 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான இந்தப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால் தமிழ் உரிமையை வாங்கிய சுப்பையா மிகவும் பயந்துவிட்டாராம். அதோடு முன்பு கொடுத்த ஐம்பத்து ஐந்து இலட்சத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாது. இந்தப்பணமே வருமா? எனத் தெரியாது எனவே மேற்கொண்டு பணம் கேட்காமல் படத்தைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளரோ, ஒருநாள் தாமதமானதால் பேசிய தொகையிலிருந்து இருபது இலட்சம் குறைத்துக் கொள்ளுங்கள், மீதிப் பணத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், படத்தின் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லி தமிழ்நாட்டில் படத்தை வெளியிட மறுத்துவிட்டாராம் சுப்பையா.

இதனால் அவர் மீது மலையாளத் தயாரிப்பாளர் கடுங்கோபத்தில் இருக்கிறார். அதேநேரம் கொடுத்த பணத்தை எப்படி மீட்பது? என்று குழப்பத்தில் இருக்கிறார் சுப்பையா.

இதனால் இனிவரும் நாட்களில் இதுகுறித்த சிக்கல்கள் பெரிதாக வாய்ப்பு இருக்கிறதென்கிறார்கள்.

தமிழில் குரல்மாற்று செய்யப்பட்ட அந்தப்படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை.அதேநேரம் கர்நாடகாவில் 7 திரையரங்குகளில் தமிழில் அப்படம் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts