விமர்சனம்

ரத்தம் – திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற காவலதிகாரி சொந்தக்காரணங்களுக்காக வேலையை விட்டு ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். அவருடைய நண்பர் கொலை செய்யப்படுகிறார். அதனால் மீண்டும் பணிக்குத் திரும்பி அந்தக் கொலை மற்றும் அதுபோல் நடந்த மற்ற கொலைகளைச் செய்தவர் எவர்? என்பதைக் கண்டுபிடிக்கிறார். இதுதான் ரத்தம் படத்தின் கதை.

தொடக்கத்தில் காவலதிகாரி என்றா இருக்கிறது. அதைமட்டும் மாற்றி புலனாய்வுப் பத்திரிகையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

புலனாய்வு அதிகாரி வேடங்களில் நடித்த அனுபவமிக்க விஜய் ஆண்டனி, இந்தப்படத்திலும் அந்த வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.பாடல்கள் இல்லாதது அவருக்கு மேலும் வசதியாகப் போயிற்று.

ரம்யாநம்பீசன், நந்திதா சுவேதா, மகிமா நம்பியார் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். ஒருபாடல் மற்றும் சில காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார்கள் என்று குறை சொல்லிவிட முடியாது. ஏனெனில் காதல் காட்சிகள் காதல்பாடல்கள் என எதுவுமில்லை.

ஜான்மகேந்திரன்,நிழல்கள் ரவி, ஓஏகே.சுந்தர், மிஷாகோசல், கலைராணி ஆகிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

கண்ணன் நாராயணன் இசையமைத்திருகிறார்.விளம்பரப்பாடல் தவிர படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் கோபிஅமர்நாத், திரைக்கதைக்கேற்ற ஒளிப்பதிவைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

கலை இயக்குநர் செந்தில்ராகவன், ஏதாவதொரு பத்திரிகை அலுவலகம் சென்று பார்த்துவிட்டு அரங்கம் அமைத்திருக்கலாம்.

காவல்துறை அதிகாரிக்குப் பதிலாக கதாநாயகனுக்குப் பத்திரிகையாளர் வேடம் கொடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.படம் முழுக்க ஒரு கமுக்கக் காவலதிகாரி போலவே விஜய் ஆண்டனி வருகிறார்.

சி.எஸ்.அமுதன் நகைச்சுவைப் படங்கள் எடுத்தவர், இந்தப் படத்தில் புதிய முயற்சி செய்திருக்கிறார்.

– இளன்

Related Posts