விமர்சனம்

கண்ணே கலைமானே – திரைப்பட விமர்சனம்

கிராமமொன்றில் இயற்கை மண்புழு உர உற்பத்தி செய்துகொண்டு மக்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறார் உதயநிதி.

அந்தப்பகுதியிலுள்ள அரசு கிராம வங்கியின் மேலாளராக வருகிறார் தமன்னா.

உதயநிதி வாங்கிய கால்நடைக் கடன்களைத் திருப்பிக்கட்டாமல் இருக்கிறார். அதைக் கேட்கப் போய் மோதல் தொடங்குகிறது. அது காதலில் முடிகிறது.

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு, அதன்பின் திருமணம். அதற்கடுத்து நடக்கும் ஒரு துன்பியல் நிகழ்வு எனப்போகிறது படம்.

உதயநிதியின் எதிர்கால அரசியலுக்குப் பயன்படுகிற வகையில் அவருடைய வேடமும் அவர் பேசும் வசனங்களும் அமைந்திருக்கின்றன.

அழகான தமன்னா இந்தப்படத்தில் அன்பான தமன்னாவாக இருக்கிறார். ஒரு வங்கி மேலாளர் மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வேடம் இருக்கிறது.

உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கிற பூ இராமு, பாட்டியாக நடித்திருக்கிற வடிவுக்கரசி, தோழியாக நடித்திருக்கிற வசுந்தரா ஆகியோர் அளவெடுத்துத் தைத்த சட்டை போல பொருத்தமாக இருக்கிறார்கள்.

ஜலேந்தர்வாசனின் ஒளிப்பதிவில் கிராமம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

யுவனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வருடிச் செல்கின்றன.

ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு ஒரே நேர்க்கோட்டில் திரைக்கதை அமைத்து அதற்குள் மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துகளை படம் நெடுகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

Related Posts