விமர்சனம்

பெட்டிக்கடை – திரைப்பட விமர்சனம்

பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன,

அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும்,

மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசுகள் மற்றும் அரசியல்வாதிகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் பிச்சை பெற்றுக்கொண்டு நாட்டை நாசமாக்குகிறார்கள் என்பதையும் ஆழ, அகலச் சொல்ல முயலும் படம் தான் பெட்டிக்கடை.

ஒரு கிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிற சாந்தினி, உணவே மருந்து என்று இயற்கை சார்ந்து மக்களுக்குச் சேவை செய்கிறார். அந்தக் கிராமத்தில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லை.

எது தேவையென்றாலும் கேலைன்ஸ் என்கிற நிறுவனத்துக்கு இணையதளம் அல்லது செயலி மூலம் சொன்னால் கொண்டுவந்து தருவார்கள்.

அவர்கள் கொடுப்பது தரமான பொருளும் இல்லை, விலையும் அதிகம். கிராமத்தில் சிறு கடை வைப்பதைக்கூட அதிகாரத்தின் துணை கொண்டு கேலைன்ஸ் நிறுவனம் தடுக்கிறது.

இதனால் அந்த ஊரில் பெட்டிக்கடை வைக்கப் போராடுகிறார் சாந்தினி. அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை சமகால அரசியல் அவலங்கள் மற்றும் அதிகார அத்துமீறல்கள் ஆகியனவற்றை வைத்து படமாக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

தொடக்கத்தில் இருந்து கடைசிவரை வருகிற சாந்தினி நன்றாக நடித்திருக்கிறார். அவ்வளவு பொறுப்பும் சிந்தனை வளமும் உள்ள அவரை, கைபேசி பார்த்துக்கொண்டு நிர்வாணமாக வருவது போலவும் அதை இன்னொரு ஆண் பார்த்துச் செல்கிற மாதிரி காட்டியிருக்க வேண்டியதில்லை.

கிராமத்துக்கள்வன் வேடத்தில் நடித்திருக்கும் வீரா கவனிக்கவைக்கிறார்.

அவரைக் காதலிக்கும் வர்ஷா துடிப்பும் துள்ளலுமாக இருக்கிறார்.

இவர்கள் காதலைப் பாதியில் அம்போவென விட்டுவிட்டது ஏன்?

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் தலைவராக சமுத்திரக்கனி. நடித்திருக்கிறார். வேடத்துக்குப் பொருத்தமாக மிடுக்குடன் வருகிறார்.

அஸ்மிதா எதற்கு உடலழகைக் காட்டிக்கொண்டு சும்மா சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி வரும். இறுதிக்காட்சியில் அவரைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

நகைச்சுவைக்கு நான்கடவுள் ராஜேந்திரன், வில்லத்தனத்துக்கு திருமுருகன் ஆகியோர் இருக்கிறார்கள்.

மரியாமனோகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வரிகள் படத்தின் கருத்துக்குப் பலம் சேர்க்கின்றன.படம் முடிகிற நேரத்தில் சின்னப்போண்ணுவின் குரலில் வரும் பாடல் மனதைப் பிழிகிறது.

ஒரே நேரத்தில் நிறைய விசயங்களைச் சொல்லிவிட வேண்டுமென்கிற இயக்குநரின் எண்ணத்தால் படம் நீண்டு செல்கிறது.

Related Posts