வாஸ்கோடகாமா – திரைப்பட விமர்சனம்
நல்லதுக்குக் காலமில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.நிஜமாகவே அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் வாஸ்கோடகாமா.
இந்தப்படத்தில் வாஸ்கோடகாமா என்பது ஒரு சிறை.அதில் நல்லவர்கள் மட்டுமே கைது செய்து அடைக்கப்படுவார்கள்.நல்லவர் என்கிற காரணத்தாலேயே சிறைக்குள் இருக்கிறார் நாயகன் நகுல்.அந்தச் சிறைக்குப் போவதற்காகவே நல்லவராக நடிக்கிறார் வம்சிகிருஷ்ணா.இதெல்லாம் எதற்கு? என்பதை முழுநீளப்படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் என்பதால் திரு திருவென முழித்து முழித்து நடித்திருக்கிறார் நகுல்.திரைக்கதையும் அப்படியே இருப்பதால் அவர் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கிறது.
நாயகி அர்த்தனாபினு குடும்பப்பாங்கான தோற்றத்தில் வந்தாலும் இளைஞர்களைக் கவர்கிறார்.அவர் நடிப்பிலும் துடிப்பு.
வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா, முரட்டுத் தனத்தை முழுமையாகக் காட்டியிருக்கிறார்.
ஆனந்தராஜ்,முனீஸ்காந்த், எர்டின் கிங்ஸ்லி, பிஜிலிரமேஷ்,படவாகோபி,சேசு ஆகியோர் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருக்கின்றனர்.
கே.எஸ்.ரவிகுமார், மன்சூர் அலிகான்,பிரேம்,டி.எம்.கார்த்திக் உள்ளிட்டோரும் அளவாக நடித்து வளம் சேர்க்க முயன்றிருக்கிறார்கள்.
என்.வி.அருண் இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.
என்.எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவிலும் திரைக்கதையில் எழுதப்பட்டிருக்கும் நகைச்சுவையைக் காட்சிகளிலும் கொண்டுவர நினைத்திருக்கிறார்.
தாறுமாறாகப் பயணிக்கும் திரைக்கதையை வரிசைப்படுத்த உழைத்திருக்கும் படத்தொகுப்பாளர் தமிழ்க்குமரனின் நிலை கொஞ்சம் கஷ்டம்தான்.
அனைத்துக் கெட்ட பழக்கங்களும் உள்ள ஒருவனை தன் மகளுக்கு மணமுடிக்கத் தேடும் தந்தை எனத் தொடங்கும் போது இருந்த சுவாரசியம் போகப் போகக் குறைவது பலவீனம்.
கதை என்ன? காட்சிகள் எப்படி? நடிகர்கள் சரி தானா? என எதைப்பற்றியும் யோசிக்காமல் சிரித்துவிட்டுச் செல்லட்டும் என்று நினைத்து எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்ஜிகே.
– சுரா











