சினிமா செய்திகள்

டாப்சியின் புதிய இந்திப்படத்தின் கதைக்காக தமிழ் இயக்குநருக்கு ஒரு கோடி சம்பளம் ?

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட் என்றொரு புதிய இந்திப்படம் தொடங்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளீயானது. 

அப்படத்தை இந்தியில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆகாஷ்குரானா இயக்குகிறார். 
இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை,மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் நந்தாபெரியசாமி.

அவர் சொன்ன கதை டாப்சிக்கு மிகவும் பிடித்துப் போனதால், இந்தக்கதையை முதலில் இந்தியில் எடுக்கலாம் உங்கள் கதையைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
 
அந்தக்கதைதான் ராஷ்மி ராக்கெட் எனும் படமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தை இயக்கும் ஆகாஷ்குரானா,இந்தியில் நிறையப்படங்களை இயக்கியதோடு பல வெற்றிப்படங்களுக்குக் கதை எழுதியவர்.

அப்படிப்பட்டவர் இந்தக்கதை மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது நான் இயக்குகிறேன் என்று சொல்லி இயக்குநரானதோடு,நந்தாபெரியசாமி எனும் ஜெண்டில்மேனின் கதையே இந்தப் பயணத்தின் தொடக்கம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு படத்தின் அறிவிப்பு மற்றும் முதல்பார்வை ஆகிய எல்லா இடங்களிலும் கதை – நந்தா பெரியசாமி என்று பெரிதாக்ப் போட்டிருக்கிறார்கள். 

இவற்றையெல்லாம் விட இந்தப்படத்தின் கதைக்காக இயக்குநர் நந்தாபெரியசாமிக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கோடி என்றொரு பேச்சு இருக்கிறது.இந்தித் திரையுலகில் ஒரு தமிழ் இயக்குநருக்கு இவ்வளவு மரியாதை மற்றும் சம்பளம் என்பது ஆச்சரியப்பட வைக்கிற செய்தி.

Nanda Periyasamy

Nanda Periyasamy

இது தொடர்பாக நந்தாபெரியசாமியைத் தொடர்பு கொண்டு பேசியபோது….

நீங்கள் சொன்ன மரியாதை மற்றும் சம்பளம் ஆகிய இரண்டில் மரியாதை நான் எதிர்பாராத அளவு எனக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மை. 

மூன்றாண்டுகளுக்கும் மேலாக நல்ல கதைகளை உருவாக்கவேண்டும் என்பதால் சில வாய்ப்புகளைக் கூடத் தவிர்த்துவிட்டு கதைகள் எழுதினேன். அப்படி எழுதப்பட்ட கதைகளில் ஒன்றுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்திருக்கிறது என்பது எனக்கு மிகவும் சந்தோசம்.

சம்பளத்தைப் பொறுத்தவரை,நீங்கள் சொல்லுமளவுக்கு இல்லை என்றாலும் மிக நல்ல,மனநிறைவு தரும் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் நந்தாபெரியசாமி.

நல்ல எழுத்தாளர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

Related Posts