விமர்சனம்

ராஜாவுக்கு செக் – திரை விமர்சனம்

குற்றப்புலனாய்வு காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சேரன், ஒரு வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் சொந்த மகளுக்கே சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஒரே இரவுக்குள் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அவற்றைச் சமாளித்து மீண்டாரா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் ராஜாவுக்கு செக்.

படத்தில் தனிக்காட்டுராஜாவாகப் புகுந்து விளையாடியிருக்கிறார் சேரன். குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்குரிய அலட்சிய மிடுக்கையும் பாசமிகு மகள் மீதான தந்தையின் அன்புப் பெருக்கையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மது,புகைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. அவற்றைக் குறைத்திருக்கலாம்.

தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து தன்னந்தனியனாக அவர் காட்டும் உணர்ச்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார்.பொருத்தமாகக் காட்சிகளைக் கோர்த்திருக்கும் படத்தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர்.

படத்தில் நாயகி என்றால் சேரனின் மகளாக நடித்திருக்கும் நந்தனா வர்மாதான். சேரனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். காட்சிமொழியில் அவர் உரையாடுவது அழகு.

சேரனின் மனைவியாக சில காட்சிகளில் வருகிற சரயூமோகன் பொருத்தமாக நடித்திருக்கிறார்,

சிருஷ்டிடாங்கேவுக்கு நல்ல வேடம். சரியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

இர்ஃபானுக்கு முக்கிய வேடம். இளமை மற்றும் பணத்திமிரில் அவர் செய்யும் வேலைகள் பார்க்கிறவர்களைக் கோபப்பட வைக்கிறார்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.

வினோத் எஜமான்யாவின் இசையில் ஒரே பாடல்தான் இருக்கிறது. பின்னணி இசை சிறப்பு.

எழுதி இயக்கியிருக்கிறார் சாய் ராஜ்குமார். நாயகனுக்கு வித்தியாசமான நோய், குடும்பச் சிக்கல், தொழில் நேர்த்தியால் ஏற்படும் ஆபத்து ஆகியனவற்றைச் சரியாகக் கலந்து திரைக்கதை அமைத்து அதை வேகமாகவும் நகர்த்தியிருக்கிறார். 

சிற்சில குறைகளைத் தாண்டி காதல் குறித்து படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து சிந்திக்க வைக்கிறது. 

Related Posts