சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டாருடன் அடுத்த படம் – ராஜமெளலி அறிவிப்பால் உற்சாகம்

‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெறவில்லை என்பதால், இந்த வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது நேரலை ஒன்றில் பேசும் போது, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி உறுதிசெய்துள்ளார். இந்தப் படத்தை துர்கா ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ராஜமெளலி – மகேஷ் பாபு இருவரும் இணைவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. தற்போது ராஜமெளலி உறுதி செய்திருப்பதால் மகேஷ் பாபு ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் மகேஷ்பாபுவுடன் ராஜமெளலி இணையும் படம் ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

Related Posts