மக்களுக்கு அறிவுரை சொன்ன சசிகுமார் காவல்துறைக்கும் சொல்லுங்கள் எனக்கோரும் மக்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான சசிகுமார்,ஏப்ரல் 17 அன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டைப் பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதைப் புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார்.
சாலையில் சசிகுமாரைப் பார்த்த மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதோடு, அத்தியாவசிய தேவைகளுக்காகப் போகிறவர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் காவல்துறைக்கும் அறிவுரை சொல்லுங்கள் எனும் கோரிக்கையும் சசிகுமாரை நோக்கி எழுந்துள்ளது.











