சினிமா செய்திகள்

த்ரிஷா நடித்துள்ள ராங்கி தாமதமானது ஏன்? – இயக்குநர் சரவணன் பேட்டி

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் சரவணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ராங்கி.

த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ராங்கி இயக்குநர் சரவணன் படம் பற்றிக் கூறியதாவது….

இந்தப்படத்தில் த்ரிஷா, செய்தியாளராக நடித்திருக்கிறார். அவருடைய அக்கா மகளுக்கு ஒரு சிக்கல் என்பதால் அதைச் சரிசெய்யப் போராடுகிறார். ஒருகட்டத்தில் அந்தச்சிக்கல் வெறொரு பரிணாமம் எடுத்து உலக அளவிலான சிக்கலாக மாறுகிறது அதை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.

ராங்கி என்றால் திமிர்பிடித்தவள் என்று சொல்வார்கள். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்பவர்களை இப்படிச் சொல்வார்கள்.இந்தப்படத்தில் த்ரிஷாவின் பாத்திரம் அப்படிப்பட்டதுதான்.அதனால் இந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

இந்தப்படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. தணிக்கைச் சான்று பெறுவதில் தாமதமானதால் வெளியீடும் தாமதமானது.

அதற்குக் காரணம், இந்தப்படத்தில் அமெரிக்கா, லிபியா ஆகிய நாடுகள் கதையில் இடம்பெற்றிருந்தன. அவற்றோடு, அமெரிக்காவின் எஃப் பி ஐ நிறுவனம், இந்தியாவின் ரா நிறுவனம் ஆகியன பற்றிய காட்சிகள் இருந்தன. இவற்றையெல்லாம் நீக்க வேண்டும் என்று தணிக்கையில் கூறினார்கள். அதனால் பல காட்சிகளை அமைதிப்படுத்திவிட்டோம்.

ஆனாலும் படம் பார்க்கும் இரசிகர்களுக்கு அது தடையாக இருக்காது. அக்கா மகளைக் காக்கப்போராடும் கதை என்கிற அளவில் படம் சுவாரசியமாகப் போகும்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு உஸ்பெஸ்கிதானில் பெரும்பகுதி நடைபெற்றது. சண்டைக் காட்சிகள் உட்பட எல்லாக் காட்சிகளிலும் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார் த்ரிஷா.

பல தடைகளைத் தாண்டி இப்போது திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts