சினிமா செய்திகள்

லாரன்ஸ் கொடுத்த வாக்குறுதி – கைமாறிய தம்பி படம்

2021 அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் இராகவா லாரன்சின் 46 ஆவது பிறந்தநாள். அதையொட்டி ஒரு புதியபட அறிவிப்பு வெளியானது.

அந்தப் புதியபடத்தை கே.எஸ்.இரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் இராகவாலாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிவிப்பில்,

அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் பாசக்காட்சிகள் நிறைந்து உருவாகவிருக்கிறது இந்தப் புதியபடம்.

தம்பி கதாநாயகனாக நடிப்பதால் இப்படத்தில் சிறப்பு வேடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் இராகவாலாரன்ஸ்.

இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இப்போது அந்தப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விலகிக்கொண்டதாம்.அதனால், இராகவா லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ருத்ரன் படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார் கதிரேசனே அந்தப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறாராம்.

டிரைடெண்ட் ரவீந்திரனிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, ஃபைவ்ஸ்டார் கதிரேசனிடம், இந்தப்படத்தின் படப்பிடிப்பை மட்டும் நீங்கள் பொறுப்பெடுத்து செய்யுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இராகவாலாரன்ஸ் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் அப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts