விமர்சனம்

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

நுகர்வுக் கலாச்சார வெறியில் உறவுகள் மனிதநேயம் உள்ளிட்ட உன்னதமானவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கும் படம் நிழற்குடை.

விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள தேவயானியை வேலைக்குச் சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள்.அமெரிக்காவில் குடியேற முயலும் விஜித் – கண்மணி தம்பதிக்கு அதற்கான அனுமதி கிடைத்துவிடுகிறது.இதனால் குழந்தையைப் பிரியவேண்டிய கட்டாயம் தேவயானிக்கு. அவர் தவித்துப் போகிறார். இந்நிலையில் குழந்தை காணாமல் போகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடித்திருக்கும் தேவயானி, படத்தில் மட்டுமின்றி சொல்லும் கருத்துகளிலும் மக்கள் நாயகியாகிறார்.பணம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணாமல் அன்பு முக்கியமானது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

இளம் தம்பதியராக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி ஆகியோர் நடிப்பு நன்று.இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா ஆகிய இருவரது நடிப்பும் சிறப்பு.

ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்‌ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன் உள்ளிட்டு படத்தில் நிறைய நடிகர்கள்.அவரவர் அனுபவ நடிப்புகள் இக்கதைக்குப் பலம்.

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் பாடம் சொல்கின்றன. பின்னணி இசையில் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில் காட்சிகளை அழகுபடுத்தியிருப்பதோடு அது உருவாக்க நினைக்கும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஹிமேஷ்பாலாவின் வசனங்கள், நுகர்வுக் கலாச்சார வெறி, வெளிநாட்டுமோகம் ஆகியனவற்றிற்குச் சவுக்கடியாக அமைந்திருக்கிறது.

சிவா ஆறுமுகம் எழுதி இயக்கியிருக்கிறார்.குழந்தை வளர்ப்பை மையமாகக் கொண்டு பல உயரிய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்திருக்கிறார்.அது அவருக்கும் படத்துக்கும் நன்மையாக அமைந்திருக்கிறது.

நிழற்குடை – நற்கொடை

– இளையவன்

Related Posts