விமர்சனம்

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்,ஒரு பறவையைப் படம்பிடிப்பதற்காக ஊட்டிக்குச் செல்கிறார்.ஊட்டியில், பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார் நாயகி கிரிஷா குரூப்.இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.ஸ்ரீராம் கார்த்திக் க்ரிஷா குருப் மீது காதல் கொள்கிறார்.ஆனால்,அவருக்கு வேறொரு காதல் இருக்கிறது.அந்தக் காதலனுடன் தன்னைச் சேர்த்து வைக்கக் கோருகிறார் நாயகி.ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டு அந்த வேலையில் நாயகன் ஈடுபடுகிறார்.எண்ணியது ஈடேறும் நேரத்தில் சில அதிரடி மனமாற்றங்கள் ஏற்படுகின்றன.அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை இதமாக இயம்பியிருக்கும் படம் மைலாஞ்சி.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு,மனம் முழுக்க காதலை வைத்துக் கொண்டு அப்படி ஒன்றே இல்லாததுபோல நடிக்க வேண்டிய வலிமையான வேடம்.அதை முழுமையாக உள்வாங்கி சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்பாவி முகம் அழகிய வதனம் ஆகியனவற்றால் பார்த்தவ்டன் ஈர்க்கும் நாயகி க்ரிஷா குருப்புக்கு அவருடைய மென்மைக்கேற்ப பறவைகள் பூங்கா நடத்தும் வேடம் அமைந்திருக்கிறது.காதலிக்கும் நேரம், காதல் குறித்து அறிந்து கொள்ளும் நேரம்,அதை வெளிப்படுத்தத் துடிக்கும் தவிப்பு ஆகிய எல்லா இடங்களிலும் கொள்ளை கொள்கிறார்.

செந்தி,கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் வேடங்களும் அவர்கள் நடிப்பும் நன்று.முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செழியனுக்கு சிறந்த வேட்டைக்களம்.அழகான கதை, இதமான கதைக்களம் ஆகியன அமைந்ததால் ஒவ்வொரு சட்டகமும் கண்களுக்கும் மனதுக்கும் இதம் தரும் விதமாக வடிவமைத்து வரவேற்புப் பெறுகிறார்.

இளையராஜாவின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் திரைக்கதையில் நிறைந்திருக்கும் காதல் வழிந்தோடி மனதை வருடுகிறது.

சற்றே பிசகினாலும் சலிப்பாகிவிடக் கூடிய திரைக்கதையோட்டத்தை தன் உழைப்பால் காத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத்.

எழுதி இயக்கியிருக்கிறார் அஜயன்பாலா.கண்டேன் காதலை சாயல் கொண்ட கதை என்றாலும் பார்க்கும்போது அது தெரியாமல் இருப்பது படத்தின் பலம்.

காதலின் வடிவங்கள் மாறிவிட்டன காதல் கானல்நீராகிவிட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் காதல் என்றும் காதல்தான் என்பதை நட்பு என்கிற இன்னொரு அகவுணர்வுடன் சூழலியியல் உயிர்நேயம் ஆகியனவற்றைத் தேவையான அளவு கலந்து கொடுத்து ஓர் உன்னதமான உணர்வைக் கொடுக்க முனைந்திருக்கிறார் அஜயன் பாலா.

– இளையவன்

Related Posts