விமர்சனம்

டெஸ்ட் – திரைப்பட விமர்சனம்

தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார்.

இந்திய மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் சித்தார்த்.கடைசியாகச் சில போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்பதால் அவரை ஓய்வு பெறச் சொல்கிறது நிர்வாகம்.அதைமீறி சென்னையில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஐந்துநாள் போட்டியில் விளையாடி தன் திறனை வெளிப்படுத்த நினைக்கிறார்.

இம்மூவரின் தேவைகளும் ஒரு நேரத்தில் ஒன்றிணைகின்றன.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.

இலட்சங்களுக்காக அல்ல இலட்சியத்துக்காக வாழும் மனிதராக நடித்திருக்கிறார் மாதவன்.நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகிய இரண்டு விதங்களிலும் நடித்திருக்கிறார்.எதிர்மறையில் கொஞ்சம் மிகையாகவே நடித்திருக்கிறார்.உனக்கு ஐந்து இலட்சம்,அவனுக்கு ஐம்பது இலட்சம், இன்னொருவனுக்கு ஐந்து கோடி நீங்களெல்லாம் நல்லவர்களா? என்று அவர் கேட்குமிடம் சம்மட்டி அடி.

அன்பான மனைவியாக நடித்திருக்கும் நயன்தாரா,அதற்கு நூறு விழுக்காடு பொருந்தியிருக்கிறார்.கணவனுடனான காட்சிகளில் ஈர்க்கிறார்.ஒரு கட்டத்தில் அந்தக் கணவனையே தாக்கி தன்னை நிலைநிறுத்துகிறார்.எல்லாக் காட்சிகளிலும் அவர் நடிப்பு சிறப்பு.

மட்டைப்பந்து வீரராக நடித்திருக்கும் சித்தார்த்,உச்சத்தில் இருப்பவர்களின் சிக்கல்களை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.தன் மகனா? நாடா? என்று முடிவெடுக்க வேண்டிய இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

சித்தார்த்தின் மனைவியாக நடித்திருக்கிறார் மீராஜாஸ்மின்.சண்டக்கோழி மீராஜாஸ்மினை சைவக்கோழியாக்கியிருக்கிறார்கள்.அதிலும் தன் இருப்பைத் தக்க வைத்திருக்கிறார்.

மாதவனின் நண்பராக வரும் காளிவெங்கட் பார்வையாளர்களின் மனசாட்சியாக இருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்.அரசியல்வாதியாக வரும் ஆடுகளம் முருகதாஸும் நன்று.

விராஜ்சின்கோலியின் ஒளிப்பதிவில் காட்சிகளின் ஒளியமைப்பு காட்சிகளுக்கேற்ப மிக இயல்பாக அமைந்திருக்கிறது.

பின்னணி பாடகி சக்திஸ்ரீகோபாலன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் மெல்லினம்.பின்னணி இசை வல்லினம்.

எழுதி இயக்கியிருக்கும் சசிகாந்த், உச்சநிலை மனிதர்கள், மத்திய நிலை மனிதர்கள் ஆகியோரின் மனஉணர்வு நிலைகளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

போட்டி, தேர்வு ஆகிய இருபொருள்படும் தலைப்பை வைத்து அவ்விரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

– கதிரோன்

பின்குறிப்பு – இப்படம் ஏப்ரல் 4,2025 முதல் நெட்ப்ளிக்ஸ் இணைய தளத்தில் காணக்கிடைக்கிறது.

Related Posts