மை லார்ட் – திரைப்பட விமர்சனம்
அதிகாரங்கள் எளிய மனிதர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன? என்கிற அவலங்களை நிஜத்துக்கு நெருக்கமாகச் சொல்லி, பார்க்கும்போது சிரிக்கவும் படம் முடிந்ததும் சிந்திக்கவும் வைத்திருக்கும் படம் மை லார்ட்.
கோயில்பட்டி தீப்பெட்டி தொழிலாளி சசிகுமார்,உயிரோடு இருக்கும்போது இறந்தவராகப் பதிவு செய்யப்படுகிறார்.அதன்பின் அவருடைய சேவை நாட்டுக்குத் தேவையாகிறது.அவர் எதனால் இறந்தவர் ஆக்கப்படுகிறார்? மீண்டும் அவர் தேவைப்படுவது ஏன்? அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பனவற்றையெல்லாம் எள்ளலும் ஏகடியமுமாகப் பேசியிருக்கிறது இந்தப்படம்.
தீப்பெட்டித் தொழிலாளி வேடத்துக்கு அட்சர சுத்தமாகப் பொருந்தியிருக்கிறார் சசிகுமார்.இலட்சக்கணக்கான எளிய மக்களைப் பிரதிபலிக்கும் வலிய கதாபாத்திரம் அவரால் சிறக்கிறது.மிக மிக ஆழமான விசயங்களைப் பேசுகிறோம் என்று தெரியாமலே பேசும் அப்பாவித்தனம் கலந்த வேடத்தை மிக இயல்பாகச் செய்து வரவேற்பைப் பெறுகிறார்.
நாயகி சைத்ராவின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் மிக நன்று.கடவுள் பெயரைச் சொல்லி பணம் படைத்தவர்கள் ஏழை மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருக்கிறோம்.இந்தப்படத்தில்,இந்த எளிய பெண்மணி தன் எண்ணத்தை ஈடேற்ற கடவுளைப் பயன்படுத்தும் விதம் சி(ரி)றப்பு.
ஒன்றிய அமைச்சராக நடித்திருக்கும் ஆஷா சரத்,படுத்துக் கொண்டே ஜெயித்திருக்கிறார்.அவருடைய அனுபவ நடிப்பு அந்த வேடத்துக்குப் பெரும்பலம்.
மக்கள் குத்து எனும் பத்திரிகையாசிரியராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம்,நேர்மையான பத்திரிகையாளர்களின் முகத்தை அகத்தில் தேக்கி நடித்திருக்கிறார்.அதனால் மக்கள் மனதில் தேங்குகிறார்.
தரகராக நடித்திருக்கும் அருள் எழிலன்,சமுதாய அவலங்களின் மொத்த உருவமாகத் தோன்றியிருக்கிறார். நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்குரைஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், கந்துவட்டிக்காரராக வரும் வசுமித்ர ஆகியோர் பொருத்தமான தேர்வுகள். பொருத்தமான நடிப்புகள்.
ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா,என்னால் இந்தக் கதைக்களத்தையும் கண்களில் நிறைந்திருக்கும்படி காட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார்.
ஷான்ரோல்டனின் இசை, ஒரு கதாபாத்திரம் போலவே படம் நெடுகப் பயணம் செய்து கண்களையும் மனதையும் கசிய வைத்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராசன்,படத்தின் பிற்பாதியைப்போல் முற்பாதியையும் தொகுத்திருக்கவேண்டும்.
எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், அரசதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.அந்தக் கேள்விகளை அன்பால் எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.அன்பின் குறியீடு வள்ளலார் படத்தில் இருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு இறுதிக்காட்சி விடை சொல்கிறது.தற்கால அடாவடி அதிகாரங்களை நினைவூட்டும் கதாபாத்திரங்கள்,காட்சிகள்,வசனங்கள் அவருடைய தனிச்சிறப்பு.
மைலார்ட் – மாந்தநேயம்.
– ஆநிரையன்











