விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 – திரைப்பட விமர்சனம்

அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் நிறைந்திருக்கும் தற்காலத்திலேயே இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களை வதைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. 1947 ஆம் ஆண்டில் எப்படி இருந்திருக்கும்?

செங்காடு எனும் கிராமம்,அங்கு வாழும் மக்களுக்கு நெசவுத்தொழிலே பிரதானம். அம்மக்களீன் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயன், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவதையே தொழிலாக வைத்திருக்கும் அவருடைய மகன்.ஒருகட்டத்தில் அவன் நாயகனால் கொலைசெய்யப்படுகிறான்.

நாயகனைப் பழிவாங்கத் துடிக்கும் ஆங்கிலேயன், சுதந்திரம் கிடைத்த செய்தியையும் மறைக்க நினைக்கிறான். இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.

கதைக்கேற்ற நாயகனாக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் கவுதம்கார்த்திக். நல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடம். அதைச் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகி ரேவதிசர்மா நல்வரவு. முதல்படத்திலேயே கவனிக்க வைத்திருக்கிறார். நாயகனின் நண்பராக வரும் புகழுக்கு இந்தப்படம் நல்லபெயரைப் பெற்றுத்தரும்.

ரிச்சர்ட் ஆஷ்டன்,ஜேஷன் ஷா உட்பட படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நடிகர்களும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கலை இயக்குநர் சந்தானமும் ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் 1947 ஆம் ஆண்டு மண், மக்கள், நிலவளம் ஆகியனவற்றைக் கண்முன் கொண்டுவர கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு புதுவிதக் காட்சியனுபவத்தைக் கொடுக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையிலும் அந்தக் காலகட்டத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சுதர்சன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் பார்த்துச் சலித்த கதைதானே என்கிற எண்ணம் வராமல் படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.

– ரத்னம்

Related Posts