விமர்சனம்

ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பேய் பலரைக் கொல்கிறது. அப்படிக் கொல்லப்படுவர்களிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமை என்ன? அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? என்பனவற்றை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் ரிப்பப்பரி.

மாஸ்டர் மகேந்திரன் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் பயப்பட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறார்.அவருடைய நண்பர்கள் நோபல் ஜேம்ஸ், மாரி ஆகியோர் இணைந்து பயணிக்கும் காட்சிகள் படத்தை இலகுவாக்குகின்றன.இம்மூவரின் கதாபாத்திரங்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்களும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. ஸ்ரீனிக்கும் முக்கியமான வேடம். அதைப்படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

நாயகிகளாக வருகிற ஆர்த்தி, காவியாஅறிவுமணி ஆகியோருக்குத் திரைக்கதையில் பெரிய பங்கு இல்லை. ஆனால் வருகிற நேரங்களில் அவர்களுடைய முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இரசித்த காவியாஅறிவுமணியா இது? என்று வியக்குமளவுக்கு காவியாஅறிவுமணியின் தோற்றமும் நடிப்பும் இருக்கிறது.

தளபதி ரத்தினத்தின் ஒளிப்பதிவு பேய்ப்படங்களுக்கேயுரிய அம்சங்களுடன் காட்சிகளில் பயத்தைக் கலந்து திகிலடைய வைக்கிறது.

திவாரகா தியாகராஜனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பேய்க்கதைகளுக்குப் பின்னணி இசை முக்கியம் என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் அருண்கார்த்திக், ஓர் ஆழமான செய்தியை இலகுவாகக் கடத்த முயன்றிருக்கிறார். பேய் பிசாசு என்றால் மக்களுக்குப் பயம், ஆனால் அதைவிட ஆபத்தானதை நாம் எப்போதும் சுமந்துகொண்டு திரிகிறோம் என்கிற நல்ல கருத்தை உணரவைத்திருக்கிறார்.

– சுமன்

Related Posts