சினிமா செய்திகள்

முத்தையா இயக்கத்தில் விக்ரம்பிரபு கவுதம்கார்த்திக் – புதியபட விவரம்

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா.

அவற்றிற்கடுத்து தற்போது முத்தையா இயக்கிக் கொண்டிருக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்.

இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். நாயகியாக சித்தி இதானி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்துக்கு அடுத்து இன்னொரு படத்தை முத்தையா இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்தப் புதிய படத்தில் ஒன்றுக்கு இரண்டு நாயகர்கள் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் நடித்த கவுதம்கார்த்திக் மற்றும் புலிக்குத்திப்பாண்டி படத்தில் நடித்த விக்ரம்பிரபு ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் சில படங்களைத் தயாரித்திருப்பவருமான செவன் ஜி சிவா தயாரிக்க முன்வந்திருக்கிறாராம். அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை இயக்குநர் முத்தையாவிடம் கொடுத்துவிடுவதாகவும் அவரே படத்தைத் தயாரித்துத் தரட்டும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இதற்கிடையே இப்படி ஒரு படம் இருப்பதை அறிந்த தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ், இந்தப்படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இருவரில் யாரைத் தயாரிப்பாளராகத் தேர்வு செய்வது என்கிற முடிவு இயக்குநர் முத்தையா கையில் இருக்கிறது. கடைசியில், இவர்கள் இருவர் மட்டுமின்றி வேறொருவரையும் அவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts