விமர்சனம்

மெய் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அதிர வைக்கும் அநியாயங்களைச் சொல்கிறது மெய்.

இருபொருள்படும் தலைப்பிலேயே அதை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன்.

நிஜத்தில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நாயகன் நிக்கிசுந்தரம். படத்திலும் அவர் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வருகிறார்.

வந்த இடத்தில் கண்முன் நிகழும் ஒரு கொடுமையைக் கண்டு அதை எதிர்த்துப் போராடுவதுதான் படம்.

நாயகன் நிக்கி சுந்தரம், ஓங்குதாங்காக வளர்ந்திருக்கிறார். கதைப்படி அவர் அமெரிக்காவிலிருந்து வருகிறவர் என்பதால், அவருடைய இயல்பான உடல்மொழி தமிழ் உச்சரிப்பு ஆகியன பொருந்திப் போகிறது. நடிப்புக்கு இன்னும் பயிற்சி வேண்டும்.

நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ். துறுதுறுப்பானவர், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமுள்ளவர், நாயகனோடு மோதல் அதன்பின் காதல் அதற்கடுத்து அவருடைய போராட்டத்துக்கு உதவி என படம் முழுக்க நிறைந்திருக்கும் வேடம்.

காவல்துறை ஆய்வாளராக வரும் கிஷோர், உதவி ஆய்வாளர் அஜய்கோஷ் தலைமைக்காவலர் ஈ.ராம்தாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்க்கிறார்கள்..

சார்லி, ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் அனுபவம் தெரிகிறது.

வி என் மோகன் ஒளிப்பதிவு கதைக்கேற்ப இருக்கிறது, பிரீத்தி மோகன் படத்தொகுப்பில் படத்தை வேகப்படுத்தியிருக்கிறார்..
அமெரிக்க வாழ் பிரித்வி குமார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார், பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை அளவாக இருக்கிறது.,

கலகலப்பாகப் படத்தைத் தொடங்கி ஆழமான விசயத்துக்குள் இழுத்துச் செல்கிறார் இயக்குநர். கிஷோர் சம்பந்தப்பட்ட திருப்பம் எதிர்பாராதது.

பெரிய மருத்துவமனைகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் என்கிற விளம்பரங்களைப் பார்த்தால் பயம் ஏற்படுகிற மாதிரி செய்துவிட்டார்கள்.

Related Posts