December 9, 2021
சினிமா செய்திகள்

மாநாடு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான் – டி.ராஜேந்தர் பரபரப்புக் குற்றச்சாட்டு

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்டோபர் 18 அன்று, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட அறிக்கையில்….

திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது “மாநாடு”.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம்.

அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது.

சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்??

ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.

நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும்.

மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.

வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடக்காரணம், தீபாவளி நாளில் அண்ணாத்த மற்றும் எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் நேரத்தில் இந்தப்படமும் வெளியானால் நல்ல திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் இப்படம் தள்ளிப்போனதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், இன்று திடீரென சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தாய் உஷாராஜேந்தர் ஆகிய இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிம்புவின் படங்களை முடக்கச் சிலர் சதி செய்வதாகப் புகார் அளித்துள்ளனர்.

அங்கு செய்தியாளர்களிடம் டிராஜேந்தரும் உஷாராஜேந்தரும் பேசியதன் சாரம்சம்….

மாநாடு படத்தை வெளியிடத் தடை ஏற்பட தமிழ்த்திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்கிற அமைப்பை நடத்தி வரும் அருள்பதி தலைமையிலான ஒரு பத்துப்பேர்தான் காரணம். அவர்கள் தொடர்ந்து சிம்பு படங்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும்போதும் இதேபோன்ற இடையூறுகள் நடந்தன, அதன்பின் இப்போது மாநாடு படத்துக்கும் ரெட் என்று சொல்லிப் படத்தைத் தள்ளி வைக்கக் காரணமாக இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இல்லாத ஒரு சிக்கலைச் சொல்லித் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். அச்சிக்கல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆனால் நீதிமன்றம் உட்பட எந்த அமைப்பும் எங்களை எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டு தெம்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் புகார் கொடுத்திருக்கிறோம். என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? என்பதைப்பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதிலிருந்து மாநாடு படம் தள்ளிப்போனதின் உண்மையான காரணம் இதுதான் என்று தெரிகிறது.

Related Posts