சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணம் நடந்தது – வரவேற்பு நிகழ்வு விவரம்

விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வர ஆரம்பித்தார்.

அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால்,நடிகர் கவினுக்கென தனி இரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில், ஒரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துவருகிறார்.

இவர், தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்தார். இரகசியமான இவர்களின் காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமாகியிருக்கிறது.

இன்று காலை,கவைன் மோனிகா திருமணம் பார்க் ஹயாத் நட்சத்திர விடுதியில் நடந்தது.இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் சுமார் ஐம்பது பேர் மட்டும் கலந்து கொண்டனர்.

திரைத்துறையினர் கலந்து கொள்ளும் வண்ணம் திருமண வரவேற்பு நிகழ்வு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. சென்னைக்கு மிக அருகில் நடக்கவிருக்கும் அவ்வரவேற்பு நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்கத்திட்டமிட்டிருக்கிறாராம் கவின்.

வாழ்க மணமக்கள்!

Related Posts