இரும்புத்திரை கதையைக் கேட்டதும் பதறிப்போனேன் – சமந்தா பேட்டி
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. மே 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் பற்றியும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகி சமந்தா. அவர் பேசியதிலிருந்து….
இரும்புத்திரை படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்தச் சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மைச் சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது.
படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்தப் படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதைப் பற்றியும் இப்படம் பேசும்.
எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குநர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி ஃபீல் பண்ண வைத்தது இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்றப் போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.
இன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்துக் கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருக்கும்.
விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார் சமந்தா அக்கினேனி.











