சேயோன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன் – புதிய தகவல்
தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதியபடம் சேயோன்.இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவர் நடிக்கும் 26 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடியான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.கிராமிய பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடிக் காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் இரசிக்கும்படியான படமாக சேயோன் உருவாக்கப்படுகிறது.
அமரன் படத்துக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.
அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூறியிருப்பதாவது….
விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களைப் பற்றிய படம்தான் ‘சேயோன்’.அப்படம் யாருக்கும் எதிராகவோ,சாதமாகவோ இருக்காது.அனைத்துத் தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,இப்படத்தில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் இன்னொரு நடிகரும் இணையவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அந்த நடிகர் வேறு யாருமல்ல. இப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன்தான்.
படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அந்த வேடம்,பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான விருமாண்டியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
படத்தின் இயக்குநர்,இப்படம் விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களைப் பற்றிய படம் என்று சொல்லியிருக்கிறார்.அதன்படி முருகராக சிவகார்த்திகேயனைச் சித்தரித்துவிட்டு விருமாண்டியாக கமல்ஹாசனைச் சித்தரிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தின் திரைக்கதையில் இருக்கும் விருமாண்டி கதாபாத்திரத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் காரணமாகவும் படத்தின் வியாபாரம் பன்மடங்கு பெருகும் என்கிற காரணத்துக்காகவும் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
எப்படியிருப்பினும் இந்தப்படத்தில் கமல் இருக்கிறார் என்பது திரைப்பட இரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அடையக்கூடிய செய்தி என்பதில் மாற்றமில்லை.











