சினிமா செய்திகள்

சூர்யாவின் கருப்பு வெளியீட்டுத் தேதி முடிவானது – எப்படி?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு.இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.2025 ஆம் ஆண்டு ஆயுதபூசையையொட்டி அக்டோபர் முதல்தேதி படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது.அதன்பின் அக்டோபர் 20 தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.அதோடு இன்னும் பல வெளியீட்டுத் தேதிகளும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டன.கடைசியாக,ஏபரல் 10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.அதையும் ஒரு காணொலி வெளியிட்டு மறுத்துவிட்டார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி.

இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் வியாபாரம் முடிவடையாமல் இருந்ததே படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படாமல் இருந்ததன் காரணம்.

இப்போது அது உறுதியாகிவிட்டதெனச் சொல்லப்படுகிறது.

இன்னமும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகவில்லையெனினும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இப்படத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதாக இரண்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் அவற்றில் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.மிக விரைவில் இது நடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

இதனால், படத்தின் வெளியீட்டுத்தேதியை முடிவு செய்து அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்க படத்தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துவிட்டது.

அந்த முடிவின்படி,இந்தப்படம் மே 15 ஆம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.

ஏன் மே 15?

இப்படத்தின் இணையதள ஒளிபரப்பு விற்பனை தொடர்பான உறுதி கிடைத்ததும் இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்தவுடன் வெளியிடலாம் என நினைத்திருந்தனராம்.அதேநேரம்,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதியையும் எதிர்பார்த்திருந்தனர்.

இப்போது தேர்தல் ஏப்ரல் 23 என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் அது முடிந்ததும் படத்தை வெளியிடலாம் என ஏற்கெனவே எடுத்த முடிவைச் செயல்படுத்த எண்ணிய நேரத்தில், ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள கர படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே,அந்தப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தப்படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து மே 15 ஆம் தேதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமென்று சொல்லப்படுவதால் கோடை விடுமுறைக்கேற்ற படமாக இருக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

Related Posts