நயன்தாரா பற்றிய அநாகரிகப் பேச்சு – நடிகர் சங்கம் கண்டனம்
நடிகர் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர்.சி.வி.சண்முகம் அவர்களுக்கு,
சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாகத் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.
தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கொள்கைரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்,ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாளவேண்டி இருக்கிறது.ஆனால் தாங்கள், சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.மக்களின் கனவு என்பது,ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது,விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது,நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது,தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது,எல்லை காக்கும் இராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்.
இது பெண்களின் யுகம்.அவர்கள் இல்லாத துறையே இல்லை.வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக,ஆசிரியராக, வழக்கறிஞராக,பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக,பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. அரசியலில் கோலோச்சிய இந்திராகாந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்கமுடியும். அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம்… தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்……
– தென்னிந்திய நடிகர் சங்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.











