விஜய் படத்துக்குப் பிறகு இணைந்த வெற்றி ஜோடி – காப்பான் பட சுவாரசியம்
சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும் நடிக்கும் காதல்பாடல் போலும்.
அதற்கான பாடல்பதிவு மிக அண்மையில் நடைபெற்றிருக்கிறது.
அந்தப்பாடலை பென்னிதயாளும் தர்ஷனாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
2007 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இடம்பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மதுரைக்குப் போகாதேடி பாடலும் இவர்கள் இருவரும் இணைந்து பாடியது.அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பாடியுள்ள பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப்பாடல் மூலம்தான் தர்ஷனா பாடகியாக அறிமுகமானார்.
அதன்பின் அமெரிக்காவுக்குப் போய்விட்ட அவர் அவ்வப்போது வந்து பாடல்கள் பாடுவார். அவர் பாடி காஞ்சனா படத்தில் இடம்பெற்ற கறுப்புப் பேரழகா, பைரவா படத்தில் இடம்பெற்ற அழகிய சூடான பூவே உள்ளிட்ட எல்லாமே வெற்றிப் பாடல்கள்.
அவர் இப்போது, காப்பான் படத்துக்காக ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் கபிலன் எழுதியுள்ள பாடலைப் பாடியுள்ளார்.
அழகிய தமிழ்ச் சொற்களில் அமைந்துள்ள இந்தப்பாடல் பெரிதும் வரவேற்புப் பெறும் என்று தர்ஷனா தம் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.
மேலே உள்ள படம் அந்தப்பாடல் பதிவின் போது எடுக்கப்பட்டது.
இயக்குநர் கே.வி.ஆனந்த், பாடலாசிரியர் கபிலன், இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ், பாடகி தர்ஷனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .











