சினிமா செய்திகள்

காலா பட வியாபாரத்தில் இவ்வளவு சிக்கல்களா?

காலா படத்தின் வியாபாரம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, மதுரை,திருநெல்வேலி,கோவை, சேலம் ஆகிய விநியோக மையங்கள் உள்ளன.

இவற்றில் சென்னையை சத்யம் திரையரங்குக்காரர்களுக்கும், மதுரையை பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியனுக்கும், கோவையை திருப்பூர் சுப்பிரமணிக்கும், செங்கல்பட்டை அருள்பதிக்கும், சேலத்தை 7ஜி சிவாவுக்கும் கொடுத்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

நார்த் சவுத் என்று சொல்லப்படும் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு பகுதிகளில் வட ஆற்காடு சீனு என்பவருக்கும் தென் ஆற்காடை லத்தீப்ரவி என்பவருக்கும் கொடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருச்சி பகுதியை பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வாங்கியிருக்கிறாராம்.

ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் அவுட் ரேட் அல்லது எம்ஜி அடிப்படையில் வியாபாரம் செய்வார்கள். ஆனால் இவர்கள் டிஸ்டிரிபியூசன் முறையில் வியாபாரம் செய்கிறார்கள்.

இந்தமுறை வியாபாரத்தால் படம் ஓடவில்லையென்றால் தயாரிப்பாளருக்குச் சிக்கல் ஏற்படும்.

காலா படம் பற்றி அனைவரும் பயத்தில் இருப்பதாலேயே இப்படி நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் மதுரை அன்பு, திருப்பூர் சுப்பிரமணி, அருள்பதி போன்றோர்தான் தமிழ்த்திரையுலகின் வியாபாரங்களைக் கெடுப்பதாகக் குற்றம் சொல்லப்பட்டது.

அவர்களுக்குப் படம் கொடுத்தால்தான் பிரச்சினையில்லாமல் படம் வெளியாகும் இல்லையென்றால் பட வெளியீட்டில் சிக்கலை உருவாக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இவர்களுக்கு எதிராகத்தான் ஐம்பதுநாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது என்றும் சொல்லப்பட்டது.

விஷால் இவர்களுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் இரும்புத்திரை பட வெளியீட்டில் பல சிக்கல்கள் உருவாகின என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கே ரஜினி படத்தின் விநியோக உரிமையைக் கொடுத்திருப்பதன் மூலம், இதுவரை இவர்களைப் பற்றிச் சொல்லப்பட்ட விசயங்கள் உண்மை என்று நிரூபணம் ஆகியிருப்பதாகத் திரைத்துறைக்குள் பேச்சு.

Related Posts