விமர்சனம்

கே 13 – திரைப்பட விமர்சனம்

எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார்.

அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம்.

திரைப்படத்தை சிறந்த கலையாக மட்டுமே பார்க்கக்கூடிய உதவி இயக்குநராக நடித்திருக்கிறார் அருள்நிதி. டிவிடி களைப் பார்த்து காப்பியடிக்காமல் சொந்தக்கதையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைக்கிற அரிதான வேடம் அவருக்கு.

நாயகி செத்துக் கிடக்கிறாள். கொலையா, தற்கொலையா எனத் தெரியாத தடுமாற்றம், அந்த வீட்டிலிருந்து எல்லாத் தடயங்களையும் அழித்துவிட்டுத் தப்ப முயல்வது என எல்லாக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து இடைவேளை வரை தனியாளாக நின்று படத்தைத் தாங்குகிறார்.

நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு அழுத்தமான வேடம். நன்றாகச் செய்திருக்கிறார்.

ஒரு காட்சியில் வருகிற யோகிபாபு சிரிக்க வைக்கிறார். இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரனுக்கு திருப்புமுனை கதாபாத்திரம். காயத்ரி வேடம், சும்மா வந்து போவது போல் இருந்தாலும் முக்கியமானது.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்துக்குப் பொருத்தம். தொடக்கக் காட்சியில், நாற்காலியில் கட்டப்பட்டிருக்கும் அருள்நிதி அதைப் போராடி சிறிது நகர்த்தும் நேரத்தில் பின்னால் ஷ்ரத்தா உட்கார்ந்திருக்கும் காட்சி சிறப்பு.அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்த கேமிரா வெளியே வரும்போது பிரமிப்பு.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் காட்சிகளோடு சேர்ந்து கரைகின்றன. பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் பரத் நீலகண்டன், முதல் படத்திலேயே பரிசோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறார். முன்னும் பின்னும் நகரும் திரைக்கதை புத்திசாலித்தனம் என்றாலும் அதைச் சரியாகப் பின் தொடர முடியுமா?

க்ளைமாக்ஸில் நடக்கும் அதிரடித் திருப்பம் எதிர்பாராதது என்றாலும் உண்மை எது? என்கிற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படும்.

வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டுமென்கிற அருள்நிதியின் எண்ணத்துக்கு ஏற்ற படம். ஆனால் எல்லோருக்குமான படமாக இல்லை.

Related Posts