சினிமா செய்திகள்

10 கோடி நட்டம் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சோகம்

இராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் இருந்துகொண்டிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தில் நடித்தோர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஆனால், படத்தைத் தயாரித்தோர் மகிழ்ச்சியாக இல்லையென்கிறார்கள்.

ஏன்?

இந்தப்படத்துக்கு நடிகர், நடிகையர் சம்பளம், படப்பிடிப்புச் செலவு மற்றும் அதற்கான வட்டி ஆகியனவற்றைக் கணக்கிட்டதோடு இந்தப்பெயருக்காக தயாரிப்பாளர் கதிரேசனுக்குக் கொடுத்த தொகை ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து சுமார் தொண்ணூறு கோடி செலவானதாகத் தயாரிப்பு நிறுவனம் சொல்லிக்கொண்டிருக்கிறதாம்.

ஆனால், படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் ஆகியனவற்றைக் கூட்டிப்பார்த்தால் சுமார் பத்து கோடி வரை நட்டம் ஏற்படும் என்கிறார்கள்.

இந்தப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமை சுமார் முப்பது கோடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் பதினைந்து கோடி, இந்தி உரிமை சுமார் பத்துகோடி, வெளிநாடு மற்றும் வெளிமாநில உரிமைகளில் சுமார் பத்துகோடி. ஆக மொத்தம் அறுபத்தைந்து கோடி வியாபாரம் ஆகியிருக்கிறது என்கிறார்கள்.

தமிழ்நாடு திரையரங்க வசூலைப் பொறுத்தவரை இப்போதுள்ள நிலையில் படம் ஓடிமுடியும்போது சுமார் பதினைந்து கோடி தயாரிப்பாளருக்குப் பங்கு கிடைக்கும் என்கிறார்கள்.

அப்படியானால் சுமார் பத்துகோடி நட்டம் ஏற்படும் என்கிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை நாளில் வெளியானது உடன்வந்த கார்த்தியின் ஜப்பான் படத்துக்குப் போதிய வரவேற்பு இல்லாதது ஆகிய நேர்மறை அம்சங்கள் இருந்தும் திரையுலகப் பிரபலங்கள் பலர் படத்தைப் பாராட்டி விளம்பரம் செய்தும் பத்துகோடி நட்டத்தில் நிற்கும் என்பது அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு தாண்டி மற்ற மாநிலங்களில் படம் சரியாகப் போகவில்லை என்பதால் அதில் ஏதாவது திரும்பக் கொடுக்கும் தொகை இருந்தால் நட்டத்தொகை மேலும் கூடும் நிலை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.

வெற்றிப்படம் என்று சொல்லிக்கொள்ளும் படத்தின் நிலை இதுதான் என்பது திரையுலக வியாபார வட்டாரத் தகவல். சம்பந்தப்பட்டோர் அதிகாரப்பூர்வமாகச் சொல்லும் வரை இதுதான் உலாவரும்.

இந்தத் தகவல்களில், படத்தயாரிப்பு நிறுவனம் சொல்லும் மொத்தச்செலவு தொண்ணூறு கோடி என்பது பொய்யாக இருக்கும் என்போரும் உண்டு. உண்மை அப்படி இருந்தால் நல்லது.

இல்லையெனில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் படமெடுப்பதற்கு எல்லோரும் பயப்படும் சூழல் உருவாகிவிடும்.

Related Posts