சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்
நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, இப்போது கதைநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் அவர் கதைநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே,சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலர் அவரைத் தங்கள் படத்தில் கதாநாயகனாக நடிக்கக் கேட்டு அணுகிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால், அவற்றை ஒப்புக்கொள்ளாமல் நிதானம் காத்துவந்த சூரி, இப்போது இன்னொரு படத்தில் கதைநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
அந்தப்படத்தை இயக்கப் போகிறவர் அமீர்.
வெற்றிமாறன், தங்கம் ஆகியோர் கதையை வைத்துக் கொண்டு அமீர் இயக்கவிருக்கும் படம் இறைவன் மிகப்பெரியவன்.
இந்தப்படத்தின் அறிமுகவிழா அண்மையில் பெரிய அளவில் நடந்தது. இப்படத்தில் கரு.பழனியப்பன்.அசார் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கிறார்கள்.
இதற்கடுத்து அமீர் இன்னொரு படம் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் சூரிதான் முதன்மை நாயகனாம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
நாயகனாக நடிக்கும் முதல்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிறது அடுத்த படத்தை அமீர் இயக்குகிறார் என்பது சூரிக்குப் பலம் சேர்க்கும் நிகழ்வு என்கிறார்கள்.











