விஷால் லைகா நிறுவனம் மோதல் தொடருகிறது
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் போடப்பட்டதாம்.இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாமல் அதை மீறி விஷால் செயல்படுகிறார் எனக்கூறி விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவருகிறது.
விஷால் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் வரும்போதும் விஷால் நடித்த படங்கள் வெளியாகும் நேரத்திலும் இந்த வழக்குக்கு உயிர்வரும்.
இப்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26 அன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.அந்தப்படத்தை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அப்பட அறிவிப்பு வந்தவுடன் நடந்த வழக்கு விசாரணையின்போது,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் ரூ.2 கோடியே 60 இலட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்துமாறு ரத்னம் படத்தைத் தயாரித்திருக்கும் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் கே.ஜி.திலகவதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
பல ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்குக்கு எப்போது முடிவு வரும்? எனத் தெரியவில்லை.











