சிக்கல் தீர்ந்து கேம்சேஞ்சர் கொண்டாட்டம் தொடங்கியது – நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
2025 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.அந்நிறுவனம் எம்ஜி என்ப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் படத்தை வாங்கியிருக்கிறது.
அவர்கள் வாங்கியவுடனே தமிழ்நாட்டின் விநியோகப்பகுதிகளில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்படத்தை வெளியிட முன்வந்திருக்கின்றனர்.ஆனாலும் படத்தின் மீதுள்ள பெரும் நம்பிக்கையில் விநியோக அடிப்படையில் தமிழ்நாடெங்கும் வியாபாரம் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்கிற புகார் எழுப்பப்பட்டது.
லைகா நிறுவனத்தின் சார்பில் அந்தப் புகார் எழுப்பப்படக் காரணம் இந்தியன் 3 படம் தொடர்பானது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் வெளியாகி நட்டத்தைச் சந்தித்தது.அடுத்து இந்தியன் 3 படத்தை அவர் முடித்துக் கொடுக்க வேண்டும்.அந்தப்படத்துக்காக அவர் அறுபது கோடி சம்பளம் கேட்டிருந்தார்.
ஏர்கெனவே இந்தியன் 2 நட்டம் என்று தெரிந்தும் அடுத்த பாகத்தை முடித்துக் கொடுக்க அறுபது கோடி வேண்டும் என்று அவர் சொன்னதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.அவ்வளவு சம்பளம் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பது அவர்களுடைய நிலை.
ஆனாலும் சம்பள விசயத்தில் ஷங்கர் பிடிவாதமாக இருந்ததால் இழுபறி இருந்துகொண்டிருந்தது.
இந்நிலையில்தான் கேம்சேஞ்சர் பட வெளியீட்டு அறிவிப்பு வந்தது.உடனே லைகா நிறுவனம் சார்பில் எங்கள் படச் சிக்கல் முடியாமல் அவருடைய படத்தை வெளியிடக்கூடாது என்று புகார் கொடுத்தது.
இப்போது அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்திருக்கிறது.
அப்புகாரைத் தொடர்ந்து கூட்டமைப்பினரைத் தொடர்பு கொண்ட இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 சரியாகப் போகவில்லை என்பது எனக்கும் தெரியும்.அதனால் இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன்.என் பக்கத்தில் எந்த நிபந்தனையும் இல்லை.தயாரிப்பு நிறுவனத்தோடு பேசி படத்தை முடித்துக் கொடுத்துவிடுவேன் என்று உறுதியளித்தாராம்.
இந்தியன் 3 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனமும் இதற்கு ஒப்புக்கொண்டதாம்.
இதனால் அச்சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டது.
எனவே, அறிவித்தபடி சனவரி 10 ஆம் தேதியன்று படம் வெளியாகிவிடும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இத்தகவலை, இப்படத்தைத் தமிழில் வெளியிடும் ராக்போர்ட் நிறுவனம், தமிழ்நாட்டில் கேம்சேஞ்சர் படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்கு அனைத்துத் தடைகளும் நீங்கின.இச்சிக்கலில் தங்களின் நல்லெண்ணத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து திரையுலக சகோதர வட்டங்களுக்கும் நன்றி
மிகப்பெரிய பொங்கல் கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள் என அறிவித்துள்ளது.