விடுதலை 2 படத்துடன் மோதல் – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு
அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் ஆகிய படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால்.இவர் இப்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ககன மார்கன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்தில் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக ராஜா பணியாற்றியுள்ளார்.இந்தப் படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது,அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப்படத்தின் முதல்பார்வை வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் அதிரடியாக இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
அந்தத் தேதி?
டிசம்பர் 20,2024.
இந்தத் தேதியில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் விடுதலை இரண்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படம் வெளியாகும் நாளிலேயே தன் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.அவரே தயாரிப்பாளர் என்பதால் அவர் இந்த முடிவை எடுக்க முடிந்திருக்கிறது.
இது திரையுலகில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில்? விடுதலை முதல் பாகம் வெற்றி பெற்ற படம் என்பதால் அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.அண்மையில் வெளியான இப்படத்தின் ஒரு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.ககன மார்கன் படம் பற்றி இரசிகர்களுக்கு அந்தப் பெயர் தவிர வேறு எதுவும் தெரியாது.
இந்த நிலையில்,அந்தப்படம் வெளியாகும் நாளில் ககன மார்கன் படத்தை வெளியிட்டால் இரசிகர்களிடம் முழுமையாகச் சென்று சேருமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
விடுதலை இரண்டு படத்துக்கு பெரிய மற்றும் நல்ல திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பதும் இயல்பாக நடக்கிற விசயம்.
இப்படி இரண்டு வகைகளிலும் எதிர்மறை கருத்துகள் உள்ள நிலையில் இப்படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
அதற்குக் காரணமாக அவர்கள் தரப்பில் சொல்லப்படுவதென்ன?
ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வருவது எப்போதும் நடக்கக் கூடிய நிகழ்வுதான் அதனால் திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது.
இரண்டாவதாக, விடுதலை ஏற்கெனவே வெற்றி பெற்ற படமென்பதால் அதற்கு மட்டுமே இரசிகர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. எங்கள் படம் மிக நன்றாக வந்திருக்கிறது,விரைவில் இப்படத்தின் விளம்பரங்கள் தொடங்கிவிடுவோம்.அப்போதிருந்து எங்கள் படமும் அறிமுகம் பெறும்.அதனால் முதல் நாளிலேயே படத்துக்கான ஆதரவு பெரிதாகிவிடும்.
இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் விடுதலை இரண்டு படத்துடன் மோதும் முடிவை எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்று சொல்கிறார்கள்.
நினைத்தது பலிக்கட்டும்.











