54 வயது 50 வருடங்கள் சினிமாவில் – உலகம் வியக்கும் ஸ்ரீதேவி
பிப்ரவரி 24 இரவு நடிகை ஸ்ரீதேவி மறைந்தார் என்ற செய்தி எல்லோரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் திரைத்துறையினரும் ரசிகர்களும் தவிக்கின்றனர்.
அதற்குக் காரணம் இருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 54. அவர் நடிக்க வந்தபோது வயது 4. கடந்த ஐம்பதாண்டு காலமாக அவர் திரைத்துறையில் கோலோச்சினார். இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தாலும் திரைத்துறையில் அவருடைய பங்களிப்பு ஏதாவதொருவகையில் இருந்துகொண்டிருந்தது.
அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்….
1963-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அய்யப்பன் – ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக ஸ்ரீதேவி பிறந்தார்.
தனது 4 வயதில், சாண்டோ சின்னப்பதேவர் தயாரித்து, எம்.ஏ.திருமுகம் இயக்கிய ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1967-ம் ஆண்டு வெளியான அந்தப் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா தென்னிந்திய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை அவருக்குப் பெற்றுத் தந்தது.
அதைத்தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு ‘மூன்று முடிச்சு’ படம் மூலம் கதாநாயகியாக இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தினார்.
கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றி படமாக அமைந்ததால், ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிப் படங்களிலும் இவர் கதாநாயகியாக உயர்ந்தார். முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர் இருந்தார். பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, பாலு மகேந்திராவின் ‘மீண்டும் கோகிலா’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்களின் மூலம் அவரது புகழ் உயர்ந்து கொண்டே போனது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவிக்கு இந்திப் பட உலகில் இருந்து வாய்ப்பு வந்தது. அவருடைய முதல் இந்தி படம், ‘சோல்வா சாவன்’ தோல்வியைத் தழுவினாலும், 2-வதாக வெளியான ‘ஹிம்மத்வாலா’ மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஸ்ரீதேவிக்கு இந்தித் திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும், திருப்புமுனையையும் பெற்றுத் தந்த படம், அது.
அதன் பிறகு ‘மூன்றாம் பிறை’ இந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் உருவானபோது, அந்தப் படத்திலும் ஸ்ரீதேவி நடித்தார். அதில் அவருக்கு பெரும் புகழும், பாராட்டும் கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து இந்தியில் 25 படங்களுக்கு மேல் நடித்து நம்பர்-1 கதாநாயகியாக திகழ்ந்தார்.
ஸ்ரீதேவி தென்னிந்திய மொழிப் படங்களில் புகழின் உச்சத்தில் இருந்தபோது, அவருடைய தந்தையை இழந்தார். இந்திப் பட உலகில் உச்சத்தில் இருந்தபோது தாயைப் பறி கொடுத்தார்.
அப்போது ஸ்ரீதேவிக்கு ஆதரவாக இருந்தவர், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. அவரைத்தான் ஸ்ரீதேவி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று இந்திப் பட உலகில் பேசப்பட்டது.
மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவி சம்மதிக்கவில்லை என்பதால் ஸ்ரீதேவி, போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என 2 மகள்கள் இருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தின் மூலம் ஸ்ரீதேவி திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்தார். பல வருடங்களுக்குப்பின் ஸ்ரீதேவி, ‘புலி’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். விஜய் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில், ஸ்ரீதேவி மகாராணியாக நடித்து இருந்தார். அதுவே அவர் நடித்த கடைசி தமிழ்ப் படம்.
தனது நடிப்புக்காக தமிழ்நாடு, ஆந்திரா மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், பலமுறை ‘பிலிம் பேர்’ விருதையும் பெற்றவர் ஸ்ரீதேவி. கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக, 2013-ம் ஆண்டு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.
50 வருடங்களாக இந்தியத் திரையுலகில் முடிசூடா ராணியாக வாழ்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார்.
அவருடைய மறைவுக்கு இந்தியத் திரையுலகம் மட்டுமின்றி குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழகம் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
காலங்கடந்தும் அவர் மக்கள் மனதில் நிலைத்திருப்பார் என்பது உறுதி.











